உழவர் மகன்: விமர்சனம்
உரக்கடையில் பணியாற்றும் கவுசிக்கிடம், விவசாயத்தை பற்றி கற்றுக்கொள்கிறார் சிம்ரன் ராஜ். நாளடைவில் அவர்கள் காதலிக்கின்றனர். இதை எதிர்க்கும் சிம்ரன் ராஜின் அண்ணன், தனது தங்கையை மறக்கும்படி கவுசிக்கை மிரட்டுகிறார். இந்நிலையில் தனது தாயை இழந்த கவுசிக், காதலியை நினைத்து புலம்புகிறார். அப்போது சிம்ரன் ராஜை வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். புது மாப்பிள்ளைக்கு தனது மனைவியின் முந்தைய காதல் தெரிந்ததும் சண்டை போட்டு பிரிந்துவிடுகிறார். ஏற்கனவே கவுசிக்கை வின்சிட்டா ஜார்ஜ் காதலித்தது தெரிய வருகிறது. பழைய காதலியையும் மறக்க முடியாமல், புதிய காதலியையும் ஏற்க முடியாமல் தவிக்கும் கவுசிக், இறுதியில் என்ன செய்தார் என்பது மீதி கதை.
கேரக்டருக்கு பொருத்தமான நடிப்பை கவுசிக் வழங்கியுள்ளார். காதல், சோகம், ஆவேசம் என்று நவரச நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார். சிம்ரன் ராஜ் சோகத்தை பிழிந்தெடுக்கிறார். கிராமத்து பெண்ணாக வின்சிட்டா ஜார்ஜ் கவனத்தை ஈர்க்கிறார். நில அகரிப்பு வில்லனாக விஜய் கவுதம் ராஜ், சிம்ரன் ராஜின் அண்ணனாக யோகி ராம் மற்றும் ரஞ்சன் குமார், சிவசேனாதிபதி, குமர வடிவேல் ஆகியோர், கொடுத்த வேலையை செய்துள்ளனர். விவசாய பின்னணியில் மென்மையான காதல் கதையை ப.ஐயப்பன் எழுதி இயக்கியுள்ளார். காட்சிகளுக்கேற்ப ஆர்.பி.செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரோஷன் ஜோசப் சி.ஜே, சி.எம்.மகேந்திரா, ஜானகிராஜ் ஆகியோரின் இசை யதார்த்தமாக இருக்கிறது. விவசாயத்துக்கு ஆதரவான காட்சிகளும், வசனங்களும் சிறப்பு. கூடுதல் பட்ஜெட் இருந்திருந்தால், படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.