மீண்டும் மாஸ் படத்தில் விஜய் தேவரகொண்டா
கவுதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சத்யதேவ், பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகிய பலர் நடிப்பில் வெளியான படம் ‘கிங்டம்’. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. சமீபகாலமாக, விஜய் தேவரகொண்டா நடித்த ‘தி ஃபேமிலி ஸ்டார்’, ‘குஷி’, ‘லைகர்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை. இந்த நிலையில் அதிரடி ஆக் ஷன் படமாக உருவான ‘கிங்டம்’ படம் அவருக்கு கை கொடுக்கும் என நம்பியிருந்தார். அதுவும் ஏமாற்றத்தை தந்ததால் அடுத்த படத்தில் கம்பேக் தருவதற்காக நல்ல கதைகளை கேட்டு வருகிறார்.
அதன்படி, தெலுங்கில் ‘கப்பர் சிங்’, ‘டிஜே: துவ்வட ஜகந்நாதம், ‘மிஸ்டர் பச்சான்’ போன்ற மாஸ் மசாலா படங்களை இயக்கிய ஹரிஷ் ஷங்கர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தை இயக்குகிறார். தற்போது ஹரிஷ் ஷங்கர், பவன் கல்யாணை வைத்து ‘உஸ்தாத் பகத் சிங்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகிறது. இதனை அடுத்து தில் ராஜூ தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் ஹரிஷ் ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார் என உறுதியாகியுள்ளது.
பெரும்பாலும் விஜய் தேவரகொண்டா கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடிப்பார். ஆனால், இந்த முறை முழு நீள ஆக் ஷன் மசாலா படத்தில் இறங்கி நடிக்கவுள்ளார் என்பதால் இப்போதே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.