விக்ரம் பிரபுவின் சிறை பர்ஸ்ட் லுக் வெளியீடு
சென்னை: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிக்க, விக்ரம் பிரபு நடிக்கும் படம், ‘சிறை’. வெற்றிமாறனின் இணை இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்குகிறார். ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘டாணாக்காரன்’ என்ற படத்தை இயக்கியவரும், நடிகருமான தமிழ், தான் நேரில் சந்தித்த சம்பவத்தை வைத்து கதை எழுதியுள்ளார். ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணை கைதிக்குமான பயணம் குறித்து படம் பேசுகிறது.
விக்ரம் பிரபு ஜோடியாக அனந்தா நடிக்கிறார். எஸ்.எஸ்.லலித் குமார் மகன் எல்.கேஅக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகிறார். அவரது ஜோடியாக அனிஷ்மா நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகர் இசை அமைக்க, மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபு சண்டை பயிற்சி அளிக்க, பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்கிறார். சென்னை, வேலூர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணி நடந்து வருகிறது. விரைவில் இசை மற்றும் டிரைலர் வெளியாகிறது.