ஸ்ரீதேவியால் வசனத்தை மறந்த வில்லன்
கடந்த 2015ல் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம், ‘புலி’. இதில் பல வருட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீதேவி முக்கிய வேடத்திலும், கன்னட ஹீரோ கிச்சா சுதீப் வில்லனாகவும் நடித்தனர். இந்நிலையில், ஸ்ரீதேவி பற்றி கிச்சா சுதீப் அளித்துள்ள பேட்டியில், ‘இப்படத்தில் வில்லனாக நடிக்க என்னை அழைத்தபோது தயங்கினேன். ஆனால், இயக்குனர் தொடர்ந்து வற்புறுத்தியதால் ஒப்புக்கொண்டேன். முதல் நாளில், முதல் காட்சியில் நடிக்க நான் கேமரா முன்பு நின்றபோது, என் எதிரில் ஸ்ரீதேவி இருந்தார். அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இப்படத்தில் ஸ்ரீதேவி நடிக்கும் விஷயம் அப்போதுதான் எனக்கு தெரிந்தது.
நான், ஸ்ரீதேவி, விஜய் இணைந்து நடிக்கும் ஒரு காட்சி படமானபோது, ஸ்ரீதேவியை அருகில் பார்த்த இன்ப அதிர்ச்சியில், நான் பேச வேண்டிய வசனத்தையே மறந்தேன். உடனே விஜய், ‘ப்ரோ... நீங்கதான் டயலாக் பேசணும்’ என்று என்னை உஷார்படுத்தினார். இதை பலமுறை அவர் சொன்ன பிறகே வசனம் பேசி நடித்தேன். அதற்குள் ஸ்ரீதேவி, என்ன நடக்கிறது என்று கேட்டார். முதன்முறையாக நேரில் பார்த்ததால், அவருடன் நடிக்கும் இன்ப அதிர்ச்சியில் வசனத்தை பேச மறந்துவிட்டேன் என்று சொன்னேன். அதைக்கேட்டு ஸ்ரீதேவி சிரித்தார். பிறகு அடுத்த டேக்கில் ஒழுங்காக வசனம் பேசி நடித்தேன்’ என்றார்.