விஷால்-சாய் தன்ஷிகா திடீர் நிச்சயதார்த்தம்: இனி நோ முத்தக் காட்சி: விஷால்
சென்னை: விஷாலின் திருமணம் பல ஆண்டுகளாக கேள்விக்குறியாக இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் பட நிகழ்ச்சி ஒன்றில் விஷால், நடிகை சாய் தன்ஷிகா இருவரும் காதலிப்பதாகவும், ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் செய்துகொள்வதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் விஷால்-சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
முன்னதாக விஷால், நடிகர் சங்க கட்டிடம் திறந்த பிறகு அதில்தான் தனது திருமணம் நடக்கும் என்று அறிவித்திருந்தார். இன்னும் நடிகர் சங்க கட்டிடம் முழுமையடையாத நிலையில் சொன்னபடி திருமணம் செய்து கொள்வாரா? மாட்டாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பான கேள்விக்கு, ஆகஸ்ட் 29ம் தேதி நல்ல தகவலை சொல்லுவேன் என்று அவர் பதிலளித்திருந்தார்.
இதையடுத்து நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் துரிதமாக நடந்து வந்தது. கட்டிட பணிகள் முழுவதுமாக நிறைவடைய இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், தற்போது எளிமையான முறையில் விஷால்-சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இனி படங்களில் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என விஷால் முடிவு செய்துள்ளார்.