காத்துவாக்குல ஒரு காதல் விமர்சனம்...
வடசென்னை ஏரியாவில் ஜிம் வைத்திருக்கும் மாஸ் ரவியும், லட்சுமிப்பிரியாவும் காதலிக்கின்றனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்களை ரவுடி சாய் தீனா தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார். இதனால் ஆவேசமடையும் மாஸ் ரவி, சாய் தீனாவுடன் கடுமையாக மோதுகிறார். இந்நிலையில், லட்சுமிப்பிரியவுடனான காதலை மாஸ் ரவி கைவிடும் நிலை ஏற்படுகிறது. இப்படி காத்துவாக்குல தன் காதலை இழந்தாலும், இறுதியில் வேறொரு கோணத்தில் மீண்டும் மாஸ் ரவியுடன் லட்சுமிப்பிரியா இணைகிறார். அது எப்படி என்பது மீதி கதை.
மாஸ் ரவி இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார், ஸாரி, எதிரிகளை மாஸ் ஆக பொளந்து கட்டியுள்ளார். தனது காதலியுடன் உருகும்போதும், அவரை வெறுக்கும்போதும் வித்தியாசமாக நடித்துள்ளார். வழக்கமான உறுமலுடன் வில்லத்தனம் செய்துள்ள சாய் தீனா, அழகாக வந்து இயல்பாக நடித்திருக்கும் லட்சுமிப்பிரியா, ஓவர் ரவுடியிசம் காட்டி சட்டென்று கத்திக்குத்து வாங்கும் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் கவனத்தை ஈர்க்கின்றனர்.
‘கபாலி’ விஷ்வந்த், மஞ்சுளா, ‘கல்லூரி’ வினோத், மிப்பு, மொசக்குட்டி, பழைய ஜோக் தங்கதுரை, ஆதித்யா கதிர் ஆகியோர், இயக்குனர் சொன்னதை செய்திருக்கின்றனர். ஒரு பாடலுக்கு டாக்டர் சீனிவாசன், சஞ்சனா சிங் ஆடியுள்ளனர். வடசென்னை ஏரியாவை வன்முறை கலந்த ரத்த பூமியாக ராஜதுரை, சுபாஷ் மணியன் ஆகியோரின் ஒளிப்பதிவு காண்பித்துள்ளது.
ஜிகேவி, மிக்கின் அருள்தேவ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆக்ஷன் படத்துக்கான பின்னணி இசையில் பாஸ் மார்க் வாங்கியுள்ளனர். சூப்பர் சுப்பராயன் வடிவமைத்த சில சண்டைக் காட்சிகள் அதிரடியாக இருக்கின்றன. காதலை சொல்வதா? ரவுடிகளின் ஆட்டத்துக்கு முடிவு கட்டுவதா என்று இயக்குனர் குழம்பியிருக்கிறார். நிறைய வெட்டுக்குத்து இருந்தாலும், காதல் காட்சிகள் இதமாக இருக்கின்றன.