படத்தின் வசூலை பார்த்த பிறகே தூங்கினோம்: தமன் ஆகாஷ்
சென்னை: அமோகம் ஸ்டுடியோஸ், ஒயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே.சுபாஷினி வழங்கிய ‘ஜென்ம நட்சத்திரம்’ என்ற படத்தை பி.மணிவர்மன் இயக்கினார். தமன் ஆகாஷ் ஹீரோவாக நடித்து, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்ட இப்படம் வெற்றிபெற்றுள்ளது. இதையொட்டி நடந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் நிர்வாக தயாரிப்பாளர் ஆடிட்டர் விஜயன், இசை அமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்....
அப்போது தமன் ஆகாஷ் பேசுகையில், ‘நான் நடித்து வெளியான ‘ஒரு நொடி’ என்ற படம், அதன் பட்ஜெட்டை எங்களுக்கு திருப்பிக்கொடுத்தது. ஆனால், ‘ஒரு நொடி’ படத்தின் மொத்த பட்ஜெட்டையும், ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் 3 நாட்களுக்கான கலெக்ஷன் கொடுத்துள்ளது. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், அருமையாக மார்க்கெட்டிங் செய்த அமோகம் பிக்சர்சுக்கு நன்றி. இப்படம் ரிலீசாவதற்கு முன்பு படக்குழுவினர் யாரும் சரியாக தூங்கவில்லை. படம் ரிலீசாகி வசூலை பார்த்த பிறகுதான் நிம்மதியாக தூங்கினோம். தமிழகத்தில் 150 திரைகளில் படம் ரிலீசானது. மக்களின் ஆதரவுக்கு பிறகு 250க்கு மேல் அதிகரித்தது’ என்றார்.