வில் (உயில்): விமர்சனம்
டீஸ்வர தொழிலதிபர் பதம் வேணு குமார், தனது சொத்துக்களை 2 மகன்களுக்கு சமமாக பிரித்து உயில் எழுதுகிறார். 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அலேக்யா பெயரில் எழுதி வைத்துவிட்டு இறந்துவிடுகிறார். யாரேன்றே தெரியாத பெண்ணுக்கு தந்தை கொடுத்த வீட்டை அபகரிக்க நினைக்கும் 2 மகன்கள், வேறொரு பெண்ணை அலேக்யா என்று சொல்லி நீதிமன்றத்தில் நிறுத்துகின்றனர். அந்த பெண் மீது சந்தேகப்படும் நீதிபதி சோனியா அகர்வால், சிக்கலான வழக்கை விசாரிக்கும் பொறுப்பை கோர்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்ராந்திடம் ஒப்படைக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. நீதிபதியாக சோனியா அகர்வால் மிகவும் இயல்பாக நடித்துள்ளார். பண விஷயத்தில் சிக்கிய தந்தை பிர்லா போஸை காப்பாற்ற போராடும் அலேக்யா, தனது கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் விக்ராந்த் அளவாக நடித்துள்ளார்.
மற்றும் பதம் வேணு குமார், மோகன் ராம், தமிழ்ச்செல்வி, சுவாமிநாதன், ‘பாய்ஸ்’ ராஜன் ஆகியோரும் யதார்த்தமாக நடித்துள்ளனர். சோனியா அகர்வால் சகோதரர் சவுரப் அகர்வால் இசையில் கலைக்குமார் எழுதிய பாடல்கள் ஓ.கே ரகம். கதைக்கேற்ப பின்னணி இசை பயணித்துள்ளது. ஒளிப்பதிவாளர் டி.எஸ்.பிரசன்னா, கோர்ட் காட்சிகளை மிகவும் இயல்பாக பதிவு செய்துள்ளார். எடிட்டர் ஜி.தினேஷ் பணி ஓ.கே. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எழுதி இயக்கிய வழக்கறிஞர் எஸ்.சிவராமன், நீதிமன்ற காட்சிகளை நம்பகத்தன்மையுடன் சொல்லியிருக்கிறார். பெண்கள் விழிப்புணர்வை வலியுறுத்தும் படம் என்றாலும், பல காட்சிகள் நாடகத்தன்மையுடன் நகர்வதை தவிர்த்திருக்கலாம்.