கம்பி கட்ன கதை விமர்சனம்...
சின்னச்சின்ன மோசடிகளில் ஈடுபட்டு பொதுமக்களிடம் பணம் பறித்து ஜாலியாக வாழ்க்கை நடத்தும் நட்டி நட்ராஜ், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகிறார். இந்நிலையில், வைரத்தை பதுக்கி வைத்திருந்த இடத்தில் அரசியல்வாதி முத்துராமன் கோயில் ஒன்றை கட்டுகிறார். அங்குள்ள வைரத்தை கைப்பற்ற சாமியார் வேடத்தில் கோயிலுக்குள் நுழையும் நட்டி நட்ராஜ், பிறகு அந்த கோயிலையே தனது ஆசிரமமாக மாற்றிக்கொண்டு வைரத்தை தேடுகிறார்.
அது கிடைத்ததா என்பது மீதி கதை. ‘சதுரங்க வேட்டை’யில் தில்லாலங்கடி ஆட்டம் ஆடிய நட்டி நட்ராஜ், இதில் போலி சாமியார் கேரக்டரில் அசத்தியிருக்கிறார். அவரது பாடிலாங்குவேஜும், டயலாக் டெலிவரியும் கவனத்தை ஈர்க்கிறது. ஹீரோயின்கள் ஸ்ரீரஞ்சனி, ஷாலினி மற்றும் முகேஷ் ரவி, கராத்தே கார்த்தி, காமெடி கோஷ்டி சிங்கம்புலி, கோதண்டம், முருகானந்தம், ஜாவா சுந்தரேசன், முத்துராமன் ஆகியோர் கச்சிதமாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் எம்.ஆர்.எம்.ஜெய் சுரேஷ், இசை அமைப்பாளர் சதீஷ் செல்வம் ஆகியோர் அவரவர் பணியை சிறப்பாக செய்துள்ளனர். தில்லாலங்கடி ஆட்டத்தை எழுதி இயக்கியுள்ள ராஜநாதன் பெரியசாமி, போலி சாமியாரின் லீலைகளை காமெடியுடன் அம்பலப்படுத்த முயற்சித்துள்ளார். சில இடங்களில் அதுவே ஓவர்டோஸ் ஆகிவிடுகிறது. ஆனாலும் படத்தை ரசிக்கலாம்.