பெண்களை மையப்படுத்தும் படங்கள் உருவாகாதது ஏன்? பார்வதி கேள்வி
திருவனந்தபுரம்: தமிழில் ‘பூ’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘மரியான்’, ‘உத்தம வில்லன்’, ‘பெங்களூர் நாட்கள்’, ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ ஆகிய படங்களில் நடித்தவர், மலையாள நடிகை பார்வதி திருவோத்து. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிக்கும் அவர், மலையாளம் தவிர இந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து இருக்கிறார்.
தற்போது அவர் ஊர்வசியுடன் இணைந்து ‘உள்ளொழுக்கு’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். வரும் 21ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் பார்வதி திருவோத்து அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அவர் அளித்த பேட்டி: இதுவரை பல புதிய இயக்குனர்களிடம் கதை கேட்டு இருக்கிறேன். அப்போது அவர்கள், ‘இந்தப் படத்தின் முக்கியமான கேரக்டரே நீங்கள்தான். ஆனால், ‘இது பெண்களை மையப்படுத்திய படம்’ என்று சொல்ல மாட்டோம்’ என்று சொல்லிவிடுகின்றனர்.
அதாவது, ‘பெண்களை மையப்படுத்திய படம்’ என்று சொல்லத் தயங்குகின்றனர். இந்த முடிவை எடுப்பதற்கு அவர்களை எந்தவொரு விஷயம் கட்டாயப்படுத்துகிறது என்று தெரியவில்லை. ஒருவேளை, இதை அந்த தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொள்ள முன்வராதது ஒரு காரணமாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில், இதுபோன்ற படங்களில்தான் நான் அதிகமாக நடித்து வருகிறேன்.
சமீபகாலத்தில் மலையாளத்தில் வெளியான பல படங்களில் பெண் கதாபாத்திரங்கள் இல்லை. இந்தப் படங்கள் எல்லாமே ஆண்களுக்கானது. அதில் நீங்கள், பெண் கதாபாத்திரங்களை நுழைக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். இன்னொரு விஷயம், இங்கு ஆண்கள்தான் திரைப்படங்களை தயாரிக் கின்றனர், திரைப்படங்களை விநியோகம் செய்கின்றனர், கதைகளையும் தேர்வு செய்கின்றனர். நம்மைப் பொறுத்தவரையில், நமக்கான எல்லாப் படங்களையும் நாம்தான் உருவாக்க வேண்டும்.