ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் படம் செய்த வேலை: கேரள பள்ளிகளில் பெஞ்ச் வரிசை மாற்றம்
சென்னை: மலையாளத்தில் வெளியான ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ என்ற படத்தில் கூறப்பட்ட கருத்து காரணமாக, கேரளாவில் பள்ளிகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வினேஷ் விஸ்வநாத் இயக்கியுள்ள படம் ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன். கேரள கிராமம் ஒன்றில் அரசு பள்ளியில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்த படத்தின் கதை. மாணவர்களிடையே போட்டி, நட்பு, சண்டை, அன்பு இதையெல்லாம் காட்சிப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் நல்ல கருத்து ஒன்றும் கூறப்பட்டது.
காலம் காலமாக வகுப்பறைகளில் வரிசைப்படிதான் பெஞ்ச் போடப்பட்டு மாணவர்கள் அமர்த்தப்படுவார்கள். அப்போது நன்றாக படிக்கும் மாணவர்கள் முதல் இரண்டு வரிசைகளிலும் சுமாராக படிப்பவர்கள் நடு வரிசையிலும் நன்றாக படிக்காதவர்கள் கடைசி வரிசையிலும் அமர்த்தப்படுவார்கள். இதனால் மாணவர்கள் மனதில் தவறான எண்ணங்கள் ஏற்பட்டு, மனதளவில் அவர்களிடையே பாதிப்பு ஏற்படுவதாக உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த விஷயத்தையும் படம் பேசியிருக்கிறது.
இந்த கருத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதையடுத்து கேரளாவில் 6 பள்ளிகளில் மாணவர்கள் இருக்கை முறை அரைவட்ட வடிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கடைசி பெஞ்ச் என்ற முறையே இல்லாத நிலை உருவாகியுள்ளது. இது குறித்து படத்தின் இயக்குனர் வினேஷ் விஸ்வநாத் கூறும்போது, ‘‘கேரளாவில் உள்ள பல பள்ளிகளால் இந்த வகுப்பறை உட்கட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.
குறைந்தது 6 பள்ளிகள் ஏற்கனவே இதை அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும் அவர்கள் எங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை டேக் செய்தபோது நாங்கள் அதைப் பற்றி அறிந்தோம்’’ என்றார். மேலும் சில பள்ளிகளும் இருக்கை முறையில் மாற்றம் கொண்டுவரப்போவதாக பட வட்டாரங்கள் தெரிவித்தன.