யாதும் ஊரே யாவரும் கேளிர்- திரை விமர்சனம்
இலங்கை அகதியாக இருந்து எஸ்டேட்டில் பணியாற்றும் கனிகாவின் காணாமல் போன தம்பியின் அடையாளத்தைப் பெற விஜய் சேதுபதி முயற்சிக்கிறார். கனிகாவின் தம்பி மகிழ்திருமேனியின் தந்தையைக் கொன்றுவிட்டு ஓடியவன். இதுபோன்ற சிக்கலில் இருந்து விஜய் சேதுபதி எப்படி வெளியே வருகிறார்? லண்டன் இசை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றாரா என்பது கதை. அகதியின் வழியாக உலகம் முழுக்க வசிக்கும் அகதிகளின் வாழ்க்கையையும், அவர்களின் வலியையும் பற்றி பேசியிருக்கிறார், புது இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். அகதியாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
தனக்கென்று ஒரு அடையாளத்தைத் ேதடுகிறார் ஒரு அகதி. அவர் அணிந்துகொள்ள நினைக்கும் அடையாளம், ஒரு கொலைக்குற்றவாளி என்பது அதிர்ச்சிகரமானது. இந்த ஒன்லைனை கெட்டியாகப் பிடித்து ஆழமாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டிய கதையை, நிலச்சரிவில் புதைந்த சர்ச் மீண்டும் வெளிப்படுவது மற்றும் விஜய் சேதுபதிக்கும், மேகா ஆகாஷுக்கும் இடையே அழுத்தமில்லாத காதலைத் திணிப்பது, மகிழ்திருமேனி விஜய் சேதுபதியைப் பழிவாங்கத் துடிப்பது என்று திசை தெரியாமல் சுற்றுகிறது படம்.
விஜய் சேதுபதி எந்தவிதமான மெனக்கெடலும் இல்லாமல் நடித்துள்ளார். திடீரென்று இலங்கைத்தமிழில் பேசுகிறார், திடீரென்று சென்னைத்தமிழில் பேசுகிறார். மேகா ஆகாஷுக்கு விஜய் சேதுபதியின் மீது காதல் வருவதற்கும், வெறுப்பு வருவதற்கும் சரியான காரணங்கள் இல்லை. இவை எல்லாவற்றையும் தாண்டி கனிகாவின் கேரக்டர் மனதில் பதிகிறது. விவேக் இப்போது தான் இல்லாத வெற்றிடத்தை நினைவூட்டுகிறார். ரித்விகா, மோகன் ராஜா, கரு.பழனியப்பன், சின்னி ஜெயந்த், வித்யா பிரதீப் உள்பட பலர் வந்து போகின்றனர்.
இசையை மையப்படுத்திய இப்படத்தில், ஒரு மிகப்பெரிய இசை சாம்ராஜ்ஜியத்தையே அல்லவா நடத்தியிருக்க வேண்டும். ஆனால், நிவாஸ் கே.பிரசன்னாவுக்கு அதற்கான வாய்ப்பை திரைக்கதை வழங்கவில்லை. ‘முருகா’ பாடல் மட்டும் முணுமுணுக்க வைக்கிறது. வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலம். துண்டுதுண்டான காட்சிகள், தொடர்பில்லாத காட்சிகள் இப்படத்தை பலவீனமாக்குகிறது. நல்ல விஷயத்தைச் சொல்ல வந்த இயக்குனர், அதை இன்னும்கூட நல்லவிதமாகச் சொல்லியிருக்கலாம்.