தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

12ம் தேதி வெளியாகும் ‘யாரு போட்ட கோடு’

அரசு பள்ளி ஆசிரியர் பிரபாகரன், மாணவர்களுக்கு படிப்புடன் சமூகப்பணி, அரசியல் பற்றி கற்றுக்கொடுக்கிறார். அதன்படி ஊரிலுள்ள மதுபானக்கடையை அகற்ற கோரி மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அதில் வெற்றி கிடைக்கிறது. இதனால் பார் நடத்தும் வில்லன் லெனின் வடமலைக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு, பிரபாகரன் மீது கோபம் கொள்கிறார். பிறகு நடப்பதை மையப்படுத்தி உருவான ‘யாரு போட்ட கோடு’ என்ற படம், நாளை மறுதினம் திரைக்கு வருகிறது. பிரபாகரன் மனைவியாக நடித்துள்ள மெஹாலி மீனாட்சி, ஒரு பாடல் காட்சியில் படுகவர்ச்சியாக வருகிறார். புதுமுகங்களை வைத்துக்கொண்டு, சமூக பிரச்னைகளை துணிச்சலாக பேசும் கதையை, மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் லெனின் வடமலை எழுதி இயக்கியுள்ளார்.

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியை நினைவுபடுத்தும் விதத்தில் அவர் சிறப்பாக நடித்துள்ளார். அவரது மகனாக வரும் சிறுவன் துகின் சேகுவேரா, வசன உச்சரிப்பு மற்றும் பாடிலாங்குவேஜில் அசத்தியுள்ளார். 3 பாடல்களுக்கு சவுந்தர்யன் இசை அமைத்துள்ளார். லெனின் வடமலை பாடல்கள் எழுதியுள்ளார். 2 பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைக்கும் பொறுப்பை ஜெய்குமார் ஏற்றுள்ளார். ராம் எடிட்டிங் செய்துள்ளார். அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்தாலும், இன்னமும் சாதி பாகுபாடு மற்றும் மூடநம்பிக்கையில் மூழ்கிய மக்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு பள்ளி ஆசிரியரின் மூலம் அறிவுச்சாட்டையை சுழற்றியிருக்கும் இயக்குனர் லெனின் வடமலை, ‘இது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்க்க வேண்டிய ஒரு படம் மட்டுமல்ல, கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும் கூட’ என்றார்.