யோலோ விமர்சனம்
முன்பின் தெரியாத தேவ், தேவிகா சதீஷுக்கு பொய்யான திருமணம் நடக்கிறது. இதில் இருந்து சட்டரீதியாக பிரிய வழக்கறிஞரை அவர்கள் நாடுகின்றனர். ஆனால், எல்லா முயற்சியும் தோல்வி அடைகிறது. நிஜமாகவே தேவிகா சதீஷை தேவ் காதலிக்க தொடங்குகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
வித்தியாசமான இக்கதையை காமெடியாகவும், சற்று குழப்பத்துடனும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் எஸ்.சாம். கேரக்டரை உணர்ந்து நடித்துள்ள தேவ், அழகுடன் நடிப்பையும் வாரி வழங்கியுள்ள தேவிகா சதீஷ் நம்பிக்கைக்குரிய வரவுகள். படவா கோபி, ஆகாஷ் பிரேம் குமார், பிரவீன், நித்தி, திவாகர், யுவராஜ் கணேசன், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுவாதி நாயர், பூஜா ஃபியா, கலைக்குமார் ஆகியோரும் இயல்பாக நடித்துள்ளனர்.
இவ்வுலகில் நாம் வாழ்வது ஒருமுறைதான் என்பதை சொல்லும் இயக்குனர், இருவர் வாழ முடியாத வாழ்க்கையை மற்ற இருவர் வாழ்வதாக காட்டியுள்ளார். அமானுஷ்யம், ஃபேண்டஸி கலந்த ரோம்-காம் படமாக உருவாகியுள்ளது. கதைக்கேற்ற இசையை சகிஷ்னா சேவியர் கச்சிதமாக வழங்கியுள்ளார். சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவு பளிச் ரகம். மகளின் விருப்பத்தை மதிக்காமல், தனது எண்ணப்படியே நடக்க அவரை வலியுறுத்துவதும், இறுதியில் தடாலென்று திருந்துவதும் சினிமாவில் மட்டுமே சாத்தியம். மாறுபட்ட கதையில் வழக்கமான காட்சிகளே இடம்பெற்றுள்ளன.