யோலோ முழுநீள பொழுதுபோக்கு படம்: சொல்கிறார் ஹீரோ தேவ்
சென்னை: இயக்குநர் சாம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘யோலோ’. புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்கிறார். இதில் தேவிகா, படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். எம்ஆர் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ளது “யோலோ”.
இது பற்றி நாயகன் தேவ் கூறியது: நடிக்கும் ஆசை வந்ததும் சினிமாவில் நுழைய விரும்பினேன். ஆக்ஸஸ் பிலிம் பேக்டரில் பணியில் இணைந்தேன். பட தயாரிப்பு வேலைகளை பார்த்துக்கொண்டே நடிப்புக்கான பயிற்சிகளையும் பெற்றேன். ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் வளையம் என்ற திரில்லர் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் நடிக்க ஆரம்பித்தேன். பிறகு மற்றொரு ஹாரர் படத்திலும் நடித்து வந்தேன். மூன்றாவதாக அமைந்த படம்தான் யோலோ. ஆனால் இப்போது அதுதான் நாளை திரைக்கு வர உள்ளது. மற்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்.
யோலோ என்றால் ஆங்கிலத்தில் யூ ஒன்லி லைவ் ஒன்ஸ் என்ற சொல்லின் சுருக்கமாகும். இதில் சர்ச்சைக்குரிய விஷயமோ, ஹெவியான களமோ எதுவும் இல்லை. முழுநீள என்டர்டெயிமென்ட் தரும் காமெடி படமாக இருக்கும். தயாரிப்பு பணிகளை கவனித்தபடி நடிப்பது சிரமமாக தெரியவில்லை. இதன் மூலம் ஒரு படத்தில் நடிக்கும்போது அந்த படத்தின் புரொடக்ஷன் சுமைகளை பற்றி தெரிந்துகொண்டு, அதற்கேற்ப நடித்துக் கொடுக்க சுலபமாக உள்ளது. தொடர்ந்து வித்தியாசமான கதைக் களங்களில் நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன். இவ்வாறு தேவ் கூறினார்.