100வது படங்களில் பாடிய யுவன், ஜி.வி
சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படம், 2 முறை தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் 100வது படம் என்று குறிப்பிடப்படும் படம், ‘பராசக்தி’. இதன் முதல் சிங்கிளான ‘அடி அலையே’ என்ற பாடல் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. வரும் பொங்கலன்று திரைக்கு வரும் இப்படத்தை சுதா கொங்கரா எழுதி இயக்குகிறார். சிவகார்த்திகேயன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோருடன் வில்லன் வேடத்தில் ரவி மோகன் நடிக்கிறார். இந்நிலையில், படத்தில் இடம்பெறும் மற்றொரு பாடலை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த 100வது படமான ‘பிரியாணி’ என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியிருந்தார்.
இப்போது ‘பராசக்தி’ படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடியிருப்பது குறித்து சுதா கொங்கரா வெளியிட்டுள்ள பதிவில், ‘நானும், பவதாரிணியும் ‘மித்ர்’ என்ற படத்தில் பணியாற்றியபோது, யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த பாடல்களின் டேப்பை எங்களை கேட்க வைப்பார். இன்று அவர் என் படத்துக்கு பாடியுள்ளார். வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நான் உணர்கிறேன். இது ஒரு மறக்க முடியாத வாழ்நாள் நினைவு. ஜி.வி.பிரகாஷ் குமாரின் 100வது பட ஆல்பத்தை இவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக மாற்றிய யுவன் சங்கர் ராஜாவுக்கு நன்றி. யுகபாரதி எழுதிய அற்புதமான வரிகளுக்கு அவர் உயிர் கொடுத்து சிறப்பாக பாடியிருக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
