ஜென் ஜி-க்கான படம் ஆறு அறிவு
சென்னை: ஆண்டவா ஏவிஆர் மூவிஸ் சார்பில் ஏ.வி. ராஜாத்தி தயாரிப்பில், சி.எம்.விஜய் இயக்கியுள்ள படம் ஆறு அறிவு. அம்பேத்கர் நாயகனாக நடிக்க, புதுமுகங்களின் முயற்சியில், சமூக அக்கறை மிக்க கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இயக்குனர் கே. பாக்யராஜ், நாயகன் அம்பேத்கர், நடிகை தீபா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இயக்குனர் சி.எம். விஜய் பேசியதாவது: நம்மை தாண்டி நம்மிடமிருந்து வெளிப்படுவது தான் அன்பு. அந்த அன்பை பேசும் படம் தான் ஆறு அறிவு. நாயகன் அம்பேத்கர் என் அண்ணன் மகன் கடுமையாக உழைத்துள்ளான். இந்தப்படத்திற்காக பல உதவிகளை செய்த முருகன் அவர்களுக்கு நன்றி. சினிமாவுக்கு யார் வேண்டுமானாலும் வாருங்கள் ஆனால் உண்மையாக இருங்கள். ஆறு அறிவு படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. ஜென் ஜி கிட்ஸுக்கு இந்த படம் பிடிக்கும். வேறு வயதினருக்கு இந்த படம் பிடிக்குமா என படமெடுக்கவில்லை. சமூக அக்கறையுடன் ஒரு படைப்பை எடுத்துள்ளோம் என்றார்.
