சென்னை: ஆறுபடை புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷைல் குமார் தயாரித்துள்ள படம், ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி எழுதி இயக்கியுள்ளார். ‘ஜென்டில்மேன் 2’ சேத்தன் சீனு, ஆஸ்னா சவேரி, பிரம் குமார், மனோபாலா, சாய் தீனா, தீபா நடித்துள்ளனர். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய, அஸ்வத் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு, கே.ராஜன், கோமல் சர்மா, விஜய் விஷ்வா பங்கேற்றனர். இயக்குனரும், ‘பெப்சி’ தலைவருமான ஆர்.கே.செல்வமணி காட்டமாக பேசுகையில், ‘‘இன்று தமிழ் படவுலகை வாழ வைப்பவர்கள் புதிய தயாரிப்பாளர்கள்தான். கடந்த 10 ஆண்டுகளில் 2,500 படங்கள் வந்திருக்கின்றன. இதில் 2,100 பேர் புதிய தயாரிப்பாளர்கள். அவர்கள்தான் எங்களுக்கு சோறு போடுகிறார்கள்.
இத்தனை வருடங்களில் முதல் படம் எடுத்த 2,000 பேர் போய்விட்டார்கள். வெறும் 400 பேர் மீண்டும் படம் எடுக்க திரும்பி வந்தார்கள். நன்றாக சம்பாதிக்கும் ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தில் ஐந்து அல்லது பத்து சதவீத தொகையை, தங்களை வளர்த்து ஆளாக்கிய தயாரிப்பாளர்களுக்கு தரவேண்டும் என்ற சிஸ்டம் கொண்டு வந்தால், தயாரிப்பாளர்கள் குறைந்தபட்சம் நன்றாக இருப்பார்கள். சமீபகாலமாக ஏஐ மூலம் நடிகைகளை ஆபாசமாக சித்தரிக்கின்றனர். இதை கட்டுப்படுத்த அரசு ஆவன செய்ய வேண்டும். இங்கு யாரும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வாங்குவது இல்லை. கொஞ்சம் பிரபலம் ஆகும்போது, பிளாக்மெயில் செய்து உயர்வான ஊதியத்தை பெறும் சூழல் இருக்கிறது’’ என்றார்.
 
   
