Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

போட்டோஷூட் மோசடி: எச்சரித்த அதிதி ராவ்

மும்பை: போட்டோஷூட் நடத்துவதாகக் கூறி, தனது பெயரைப் பயன்படுத்தி மர்மநபர் ஒருவர் புகைப்படக் கலைஞர்களை ஏமாற்றி வருவதாக நடிகை அதிதி ராவ் ஹைதரி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் பட நடிகையும் நடிகர் சித்தார்த்தின் மனைவியுமான அதிதி ராவ் ஹைதரியின் பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி, மர்மநபர் ஒருவர் வாட்ஸ்அப்பில் போலிக் கணக்கு ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்தக் கணக்கிலிருந்து, திரையுலகைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பிறருக்கு குறுஞ்செய்தி அனுப்பி, ‘போட்டோஷூட்’ வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி மோசடியில் ஈடுபட முயற்சித்துள்ளார். இந்த விவகாரம் அதிதி ராவ் ஹைதரியின் கவனத்திற்கு வந்ததை அடுத்து, அவர் உடனடியாக தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பகிரங்க எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மோசடி நபர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் எண்ணின் ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்துள்ளார். மேலும், ‘நான் தொழில்முறை விஷயங்களுக்காக எனது தனிப்பட்ட செல்போன் எண்ணைப் பயன்படுத்துவதில்லை. எனது வேலை தொடர்பான அனைத்து தகவல்களும் எனது அதிகாரப்பூர்வ குழு மூலமாகவே கையாளப்படுகின்றன. எனவே, ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த மோசடி எண்ணுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். இதுபோன்ற சந்தேகத்திற்குரிய செய்திகள் வந்தால் உடனடியாகத் எனது குழுவினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்’ என்று கூறியுள்ளார்.