Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அரசியலுக்கு வர திட்டமா?: சந்தானம் அலறல்

சென்னை: பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்க, பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த் ராஜ் தமிழிலும், கன்னடத்திலும் இயக்கியுள்ள படம், ‘கிக்’. வரும் செப்டம்பர் 1ம் தேதியன்று திரைக்கு வரும் இதில் சந்தானம், தான்யா ஹோப், ராகினி திவிவேதி, செந்தில், கோவை சரளா, தம்பி ராமய்யா, மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா, முத்துக்காளை, மனோபாலா, கிங்காங் நடித்துள்ளனர். சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அர்ஜூன் ஜென்யா இசை அமைக்க, ஒய்எம்ஆர் கிரியேஷன்ஸ் வெளியிடும் இந்தப் படம் குறித்து சந்தானம் பேசியதாவது: விஜய்க்கு ‘குஷி’ படம் மாதிரி எனக்கு ‘கிக்’ படம் அமைந்தது. அதாவது, திருமணத்துக்குப் பிறகு கணவன், மனைவிக்கு இடையே ஏற்படுகின்ற ஈகோ யுத்தம் எப்படி தீர்க்கப்படுகிறது என்பது திரைக்கதை.

சென்னை, பாங்காங் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. நான் நடித்த படங்களில் எனக்கே இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். பல ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக இருந்து, ஹீரோவுடன் இருந்தபடியே கதையை நகர்த்த உதவிஇருக்கிறேன். இதில் அந்தப் பொறுப்பை தம்பி ராமய்யா ஏற்றுள்ளார். கர்நாடகாவின் அனிருத் என்று சொல்லும் அளவுக்கு அர்ஜூன் ஜென்யா அருமையான பாடல்களை வழங்கி இருக்கிறார். ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்துடன் ‘கிக்’ படத்தை ஒப்பிட வேண்டாம். இதற்கு காரணம், இது சந்தானம் படம் இல்லை. இயக்குனர் பிரசாந்த் ராஜின் படம். சினிமாவில் பிசியாக இருந்து வரும் எனக்கு எந்த அரசியலும் சரிப்பட்டு வராது. எனவே, நான் அரசியலுக்கு வரமாட்டேன். தயவுசெய்து என்னை வம்பில் மாட்டிவிட வேண்டாம்.