ஸ்ரீ காகுளம்: ஆந்திர மாநிலம் ஸ்ரீ காகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘புஷ்பா-2’ படத்தின் ஷூட்டிங் நடந்தது. நடிகர், நடிகைகள், திரைப்படக் கலைஞர்கள் ஆகியோர், ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு நேற்றிரவு தனியார் பஸ் மூலம் ஐதராபாத்தை நோக்கிச் சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை நல்கொண்டா மாவட்டம் நார்கட்பள்ளியின் புறநகர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், அங்கே நின்றிருந்த ஆந்திர அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனியார் பஸ்சில் இருந்த துணை நடிகர்கள், டெக்னீஷியன்கள் பலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அவர்களை அங்கிருந்த சிலர் மீட்டு, உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிகப்பட்டு வருகிறது. தகவலறிந்த போலீசார் விபத்தில் சிக்கிய பஸ்சை அங்கிருந்து மீட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இயக்குனர் சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளிவந்த ‘புஷ்பா’ படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் மூலம் நடிகர் அல்லு அர்ஜுன், ஹீரோயின் ராஷ்மிகா மற்றும் இந்த படம் சர்வதேச அளவில் பிரபலமானது.
