துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஜோடியாக நடித்துள்ள ‘பைசன்: காளமாடன்’ என்ற படம், வரும் 17ம் தேதி திரைக்கு வருகிறது. மாரி செல்வராஜ் எழுதி இயக்க, நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய ரஜிஷா விஜயன், மேடையில் திடீரென்று கண்கலங்கினார். அவர் பேசுகையில், `முதன்முதலில் மாரி செல்வராஜ் என்னை ‘கர்ணன்’ படத்தில் நடிக்க அழைத்தபோது, மிகவும் சந்தோஷமாக இருந்தது. அந்த படத்துக்கு பிறகு இரண்டு படங்கள் இயக்கினார். ‘அந்த படங்களில் ஏன் என்னை நடிக்க அழைக்கவில்லை?’ என்று கேட்டேன். ‘அந்த படங்களில் உங்களுக்கு பொருத்தமான கேரக்டர் இல்லை’ என்று சொன்னார்.
திடீரென்று ஒருநாள் போன் செய்து, ‘ஒரு படம் இயக்குகிறேன். அதில் ஹீரோவுக்கு அக்காவாக நடிக்க வேண்டும். உங்களால் முடியுமா?’ என்று கேட்டார். அதற்கு நான், ‘ஒரு படத்தில் அக்கா, தங்கை, அம்மா என்று கேரக்டர் இருக்கும். அதுபற்றி எனக்கு கவலை இல்லை. உங்கள் இயக்கத்தில் நடித்தால் போதும்’ என்றேன். ‘கர்ணன்’ படத்துக்காக நீச்சல் கற்றுக்கொண்டேன். பிறகு எனக்கு நீச்சல் பழக்கம் இல்லை. ‘பைசன்’ படத்தில் நடிக்கும்போது, கிணற்றில் குதிக்கும் ஒரு காட்சி இருந்தது. என்னிடம் மாரி செல்வராஜ், ‘நீச்சல் தெரியுமா?’ என்று கேட்டார். ‘தெரியும்’ என்று தலையாட்டினேன். உடனே அவர் குதிக்க சொன்னார். அனுபமா பரமேஸ்வரன் குதித்து நீந்தினார்.
நான் தண்ணீரில் மூழ்கினேன். அப்போது என் மனதில், ‘அவ்வளவுதான் வாழ்க்கை’ என்று தோன்றியது. அடுத்த விநாடி கண் திறந்து பார்த்தேன். கூலிங் கிளாஸ், ஷூவுடன் கிணற்றில் குதித்து நீந்திய மாரி செல்வராஜ், கஷ்டப்பட்டு என்னை காப்பாற்றினார். அவ்வளவு நம்பிக்கைக்குரிய அவரது படத்தில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். நான் கேரளத்தை சேர்ந்த மலையாளி. எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்து, தென்தமிழகத்தில் ஒருவராக மாற்றிய திருநெல்வேலி மக்களுக்கு நன்றி’ என்றார்.