Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அஜித், விஜய் வெற்றியில் தேவாவுக்கு பங்கு: இயக்குனர் பேரரசு பேச்சு

சென்னை: அறம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.ராமலிங்கம் தயாரித்துள்ள ‘பி2 இருவர்’ படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் பேரரசு பேசியது: 90களில் இசையில் கலக்கிய தேவா, இப்போதும் இந்த படத்தில் அசத்தலான இசையை தந்துள்ளார். அப்போது ஒரு புறம் ரஜினி படங்களுக்கு இசையமைத்தபடி, சிறு படங்களுக்கும் இசை அமைப்பார். எப்போதும் சிறு படம் பெரிய படம் என பேதம் பார்க்காத ஒரே இசையமைப்பாளர் அவர்தான். சில இசையமைப்பாளர்களை சிறு படத் தயாரிப்பாளர்கள் சந்திக்க கூட முடியாது. சம்பள விஷயத்திலும் கறாராக இருப்பார்கள். ஆனால் தேவா சார் அப்படி கிடையாது. ரஜினி, அஜித், விஜய் படங்களுக்கு இசையமைத்தபடி புதுமுகங்கள் நடிக்கும் சிறு படங்களுக்கும் இசை அமைத்தவர்.

அஜித், விஜய்யின் வெற்றியில் தேவா சாருக்கும் பங்கு இருக்கிறது. இவ்வாறு பேரரசு பேசினார். பாடலாசிரியர் சினேகன் பேசும்போது, ‘அப்போதெல்லாம் நாங்கள் ஒரு பாடலை உருவாக்க ஆரம்பித்தால், ஒரு குழுவே ரெக்கார்டிங் தியேட்டரில் இருக்கும். இப்போது வாட்ஸ் அப்பில் மெட்டு அனுப்புகிறார்கள். பதிலுக்கு நான் வாட்ஸ் அப்பில் பாடல் வரிகளை அனுப்புகிறேன். பாடகர்கள் எங்கிருந்தோ பாடி அனுப்புகிறார்கள். அதை இசையமைப்பாளர்கள் ஓரிடத்தில் அமர்ந்து இசைக் கோர்ப்பு ெசய்கிறார். ஆனால் இந்த படத்தில் தேவா சார் அந்த பழைய பாணியைத்தான் பின்பற்றினார். அதனால்தான் அவரது பாடல்கள் காலத்துக்கும் நிற்கிறது’ என்றார். படத்தின் இசையமைப்பாளர் தேவா, இயக்குனர் சிவம், ஒளிப்பதிவாளர் வெற்றி, பட நாயகன் மனோஜ், நடிகர் சம்பத் ராம், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர்கள் எஸ்.ஆர்.பிரபாகரன், சரவண சுப்பையா உள்பட பலர் பங்கேற்றனர்.