Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஏஐயால் சினிமாவுக்கு பாதிப்பில்லை: கமல் உறுதி

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. ராஜ் கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரித்துள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் இசை. ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு. ஜூன் 5ம் தேதி படம் வௌியாகிறது. படம் குறித்து நிருபர்களிடம் கமல்ஹாசன் கூறியது: ‘நாயகன்’ படத்துக்கும் ‘தக் லைஃப்’ படத்துக்கும் இடையே என்னிடம் ஏற்பட்டுள்ள மாற்றம், அனுபவம்தான். நாயகனை விட இதில் கூடுதல் அனுபவம் அடைந்த பிறகு நடித்திருக்கிறேன். நாயகன் படத்தின் தொடர்ச்சி இந்த படம் கிடையாது. நாயகனின் எந்த சாயலும் வந்துவிடக்கூடாது என நானும் மணிரத்னம் சாரும் பார்த்து பார்த்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். நாயகன் படத்தின்போது நிறைய புதிய விஷயங்களை செய்திருந்தோம். இப்போது, தொழில்நுட்பம் மேலும் அதிகமாக வளர்ந்துள்ளது.

அதையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ‘தலைவன் இருக்கிறான்’ என்ற தலைப்பில் நான் எழுதிய கதையைத்தான் மணி சாரிடம் கொடுத்தேன். அவர் அதை மாற்றியிருக்கிறார். நான் கொடுத்த கதையை படித்துவிட்டு, ‘தக் லைஃப்’ படத்தை பார்த்தால் அந்த கதையா இது என யோசிக்கும் விதமாக மாற்றத்தை செய்திருக்கிறார். படத்தில் இடம்பெற்றுள்ள முத்தக் காட்சி பற்றி கேட்கிறீர்கள். அது இயல்பான வாழ்க்கையில் இருக்கும் ஒன்று. அது ஃபேன்சி கிடையாது. ஏஐ படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அதில் ஒரு பகுதியை படித்து வந்துள்ளேன். அதில் கற்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தை அடுத்த படத்தில் பயன்படுத்துவதும் அப்படித்தான். அதில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையில் அதை பயன்படுத்த தொடங்கிவிட்டார். ஏஐ சினிமாவை ஒழித்துவிடும், வேலையின்மை ஏற்படுத்தும் என்பதெல்லாம் கிடையாது.

கம்ப்யூட்டர் வந்தபோதும் இதைத்தான் சொன்னார்கள். அப்போது கம்ப்யூட்டர், இப்போது ஏஐ அவ்வளவுதான். ஆக்‌ஷன் படங்களில் நடித்து வருவது பற்றி கேட்கிறீர்கள். மீண்டும் ஒரு காமெடி படம் செய்ய வேண்டும், வேறு ஜானர் படங்களும் செய்ய வேண்டும் என்றெல்லாம் திட்டம் இருக்கிறது. கண்டிப்பாக அதையெல்லாம் செய்வேன். இத்தனை வருடத்தில் நான் சம்பாதித்தது என்ன என சொல்ல வேண்டுமெனில், நான் வாங்கிய கார், கட்டிய வீடு இதையெல்லாம் காட்ட முடியாது. இங்கு சிம்புவும் அசோக் செல்வனும் என்னுடன் நடித்தது பற்றி பேசுகிறார்களே அதுதான் நான் சம்பாதித்தது. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.