Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அக்கரன் – திரைவிமர்சனம்

அறிமுக இயக்குனர் அருண் கே பிரசாத் இயக்கத்தில் எம் எஸ் பாஸ்கர், கபாலி விஸ்வாந்த், வெண்பா, நமோ நாராயணன், ஆகாஷ் பிரேம் குமார், ப்ரியதர்ஷினி அருணாச்சலம், அன்னராஜ் கார்த்திகேயன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “அக்கரன்”. இரண்டு பேரை சோபாவுடன் பசையைக் கொண்டு ஒட்டி வைத்து மிரட்டி சில உண்மைகளை வரவழைக்க முயற்சி செய்கிறார் வீரபாண்டி (எம்.எஸ்.பாஸ்கர்). அதற்கு பதிலாக விரிகிறது அந்த கொடுமையான பிளாஷ்பேக். இரண்டு மகள்களை வளர்க்கும் ஒரு நடுத்தர குடும்பத்து அப்பாவித் தந்தை. எப்படியேனும் ஒரு மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்து இன்னொரு மகளை அவள் விருப்பப்படி மருத்துவராக்க முயற்சிக்கிறார்.

இதற்கிடையில்தான் மருத்துவம் படிக்க கோச்சிங் செண்டருக்குச் சென்று வந்த இரண்டாவது மகள் நேரத்திற்கு வீடு வந்து சேராமல் இருக்கவே மகளும் , தந்தையும், மகளின் நிச்சயமான மாப்பிள்ளை சிவா(கபாலி விஸ்வந்த்) மூவரும் பதட்டத்தில் தேடத் துவங்குகிறார்கள். தேடல் எங்கே கொண்டு செல்கிறது, அடைத்து வைத்திருக்கும் இந்த இருவருக்கும் , மகள் காணாமல் போனதற்கும் என்ன சம்மந்தம் இதெல்லாம் இணைந்து முடிவு என்ன என்பது மீதிக்கதை. எம்.எஸ். பாஸ்கர் நடிப்பைப் பற்றி என்ன சொல்ல, மனிதன் லெஜெண்ட் . அதிலும் ‘பார்க்கிங்‘ திரைப்படம் கொடுத்த நம்பிக்கை சமீபகாலமாக பல படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் மாஸ் காட்டி நடிக்கிறார். இந்தப் படமும் அப்படித்தான். கதைப்படி எம்.எஸ்.பாஸ்கர் , விஸ்வந்த் இருவருமே நாயகர்கள்தான்.

இவர்களுடன் வெண்பா, பிரியதர்ஷினி, நமோநாராயணன் உள்ளிட்டோர் தங்களது கேரக்டர்களை அளவோடு நடித்து , கதைக்கு உதவியிருக்கிறார்கள். இயக்குநர் அருண் கே பிரசாத் பிளாஷ்பேக் காட்சிகள் இன்னும் வலிமையாகவும், மேலும் பார்வையாளர் யூகிக்கும்படி இல்லாமல் சுவாரஸ்யம் அதிகப்படுத்தியிருக்கலாம். எனினும் படிக்கும் இடமாகவே இருந்தாலும் குழந்தைகள் மீது கவனம் தேவை என்னும் அலர்ட் கொடுத்திருக்கிறார் அருண் கே பிரசாத். எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவில் விஷுவல் காட்சிகளும் ஹரிஸ் எஸ்.ஆர் இசையும் கதைக்கு வலிமை சேர்த்துள்ளன. மனிகண்டன் எடிட்டிங்கில் படத்தின் நீளம் சரியாக தீர்மானிக்கப்பட்டு போராடிக்காமல் கச்சிதமாக முடிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் சில லாஜிக் மிஸ்ஸிங், மற்றும் சுவாரஸ்யம் சற்று அதிகமாக்கியிருந்தால் மேலும் அக்கறையான படமாக கிடைத்திருக்கும் இந்த ‘அக்கரன்‘ .