குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் அப்பாவுடன் வசிக்கும் அப்பு, இங்கிலீஷ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறான். அம்மா இல்லை. கூலி வேலை செய்து மகனைப் படிக்க வைக்கும் அப்பா, காத்தாடி மாஞ்சா கயிறு கழுத்தில் அறுத்ததில் பலியாகிறார். அப்பு, மேற்கொண்டு படிக்க ஆசைப்படுகிறான். அவனுக்கு உதவ யாரும் இல்லாத நிலையில், போலீஸ் என்கவுண்டரில் தேடப்படும் சபா (‘கல்லூரி’ வினோத்) என்ற ரவுடி, அப்புவைப் படிக்க வைக்க முன்வருகிறார். இந்த இருவரும் ஒரு புள்ளியில் இணையும்போது, என்ன நடக்கிறது என்பது மீதி கதை. அப்பு என்ற ஆறாம் வகுப்பு மாணவன் வேடத்தில், இயல்பான நடிப்பில் ஜீவன் பிரபாகர் மிரட்டியிருக்கிறான். படிப்பை மட்டுமே லட்சியமாகக் கொண்ட அவன், திருடக் கட்டாயப்படுத்தியவனைப் புறக்கணித்துவிட்டு, குப்பை பொறுக்கியாவது படிப்பேன் என்று சொல்வது தன்னம்பிக்கையின் உச்சம்.
அவனுக்கு உதவும் ‘கல்லூரி’ வினோத், நடிப்பில் செம கெத்து காட்டியிருக்கிறார். அவரது காதல் மனைவியாக பிரியதர்ஷினி, நெருக்கம் காட்டியிருக்கிறார். அமைச்சருக்கும், போலீஸ் கமிஷனர் பி.எல்.தேனப்பனுக்கும் அடியாளாக இருந்து, என்கவுண்டருக்கு அவர்களால் குறிவைக்கப்படும் தர்மா என்ற கேரக்டரில் வீரா சிறப்பாக நடித்துள்ளார். சாதிவெறி பிடித்த போலீஸ் விஜய் சத்யா, ஆசிரியர் வேலு பிரபாகரன், சித்ரா, டார்லிங் மதன் ஆகியோரும் நடிப்பில் கவனிக்க வைக்கின்றனர். தீபக் ஒளிப்பதிவு மற்றும் ஆலன் விஜய் இசையில் காட்சிகள் இயல்பாக நகர்கின்றன. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இயக்குனர் வசீகரன் பாலாஜி, திரைக்கதை மற்றும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
