Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தாய்க்காக மினி தாஜ்மகால் கட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னை: தாய் மீது அதிக பாசம் கொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். ரஹ்மானின் தாய் கரீமா பேகம் கடந்த 2022-ம் ஆண்டு மரணமடைந்தார். தன் தாய் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவருக்காக தாஜ்மகால் போன்ற தோற்றம் கொண்ட ஒரு நினைவிடத்தை ரஹ்மான் கட்டி இருக்கிறார். சென்னையில் அமைந்துள்ள இந்த நினைவிடத்துக்கு சமீபத்தில் எழுத்தாளர் நாகூர் ரூமியை அழைத்துச் சென்றுள்ளார் ரஹ்மான். அங்கு சென்ற அனுபவத்தை நாகூர் ரூமி வியப்புடன் பகிர்ந்துள்ளார். அவர் கூறியது: ரஹ்மானின் அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்கு சென்றேன். அவரது உதவியாளர், மேலும் சிலர் இருந்தனர். பின் ரஹ்மான் உள்பட நாங்கள் எல்லோரும் ஒரு வேனில் ஏறிக்கொண்டோம். வேன் ரெட்ஹில்ஸுக்கு அருகில் இருந்த ஒரு இடத்துக்குச் சென்றது. அங்கேதான் ரஹ்மானின் அன்பு அன்னையின் அடக்கஸ்தலமிருந்தது. ஆனால், ஏதோ தாஜ் மகாலுக்கு வந்துவிட்ட மாதிரி இருந்தது. நான் இன்னும் தாஜ் மகாலைப் பார்க்கவில்லை. அவ்வளவு அழகாக அந்த இடம் இருந்தது. வெகு நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கே சில படங்கள் அவரோடு எடுத்துக்கொண்டோம். அவர் அம்மாவின் அடக்கஸ்தலத்தை மிகவும் ‘ரிச்’ ஆக வைத்திருந்தார். அடக்கஸ்தலத்தின்மீது போர்த்தப்பட்டிருந்த போர்வையின் அழகு கண்ணைக்கவர்ந்தது. அதற்கு நேர் எதிரே அம்மாவின் வரைபடம் ஒன்றும் இருந்தது. யாரோ ஒருவர் குர்’ஆன் ஓதிக்கொண்டே இருந்தார். அங்கிருந்த டேப்பில் திருமறை ஓதப்படும் சப்தம் கேட்டுக்கொண்டே இருக்க ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.