Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

43ல் அடியெடுத்து வைக்கும் பிரியங்கா

விஜய் ஜோடியாக ‘தமிழன்’ என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாகவும், பாடகியாகவும் அறிமுகமானவர், முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா. பிறகு இந்தியில் பிசியானார். 2018 முதல் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ‘தி ப்ளஃப்’, ‘ஜட்ஜ்மெண்ட் டே’ உள்பட சில ஆங்கில படங்களிலும், எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் பான்வேர்ல்ட் படமான ‘எஸ்எஸ்எம்பி29’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தில் இருக்கும் அவர், கடந்த 2018ல் தன்னைவிட வயது குறைந்த ஹாலிவுட் நடிகரும், பாடகருமான நிக் ஜோனாஸ் என்பவரை திருமணம் செய்தார்.

அவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்த மால்டி மேரி சோப்ரா என்ற மகள் இருக்கிறார். தனது சோஷியல் மீடியாவில் நாள்தோறும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் பிரியங்கா சோப்ராவை இன்ஸ்டாகிராமில் 9 கோடியே 20 லட்சம் பார்வையாளர்கள் பின்தொடர்கின்றனர். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தனது காதல் கணவருடன் நேரத்தை செலவிட்டு வரும் பிரியங்கா சோப்ரா, கோடை வெயிலை தணிப்பதற்காக கடற்கரை சென்றுள்ள வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். அந்த வீடியோவில் கணவரை ஓடி வந்து முத்தமிடும் பிரியங்கா சோப்ராவை, ‘உங்கள் காதல் என்றும் அழியாது’ என்று நெட்டிசன்கள் வாழ்த்தியுள்ளனர். இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடும் பிரியங்கா சோப்ராவுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.