Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

50 வருடங்களுக்கு பிறகும் ஹீரோவாகவே நடிக்கிறேன்: சென்னையில் பாலகிருஷ்ணா பெருமிதம்

சென்னை: எம்.தேஜஸ்வினி நந்தமூரி வழங்கும் 14 ரீல்ஸ் பிளஸ் தயாரித்துள்ள படம், ‘அகண்டா 2: தாண்டவம்’. ராம் ஆசம்டா, கோபிசந்த் ஆசம்டா, கோடி பருச்சுரி தயாரித்துள்ளனர். சி.ராம் பிரசாத், சந்தோஷ் டி.டெடாகே ஒளிப்பதிவு செய்துள்ளனர். தமன், இசை. போயப்பட்டி ஸ்ரீனு எழுதி இயக்கியுள்ளார். பாலகிருஷ்ணா, ஆதி பினிஷெட்டி, சம்யுக்தா மேனன், விஜி சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், சாய் தீனா, ஹர்ஷாலி மால்ஹோத்ரா நடித்துள்ளனர். யு/ஏ சான்றிதழ் பெற்று இன்று திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது.

அப்போது பாலகிருஷ்ணா தமிழில் நெகிழ்ச்சியுடன் பேசியதாவது: என் சொந்த வீட்டுக்கு வந்தது போன்ற மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம், நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். தமிழ்நாடு என் ஜென்ம பூமி. தெலங்கானா என் கர்ம பூமி. ஆந்திரா என் ஆத்ம பூமி. என் தந்தையும், குருவும், தெய்வமுமான என்.டி.ஆரின் திரையுலக வாழ்க்கை இங்குதான் வளர்ந்தது. நடிக்க வந்து 50 வருடங்களாகி விட்டது. இப்போதும் நான் ஹீரோவாக நடிக்கிறேன். தெலுங்கில் எனது 4 படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளன. அனைவரும் என் படத்தை தியேட்டரில் பார்த்து ரசியுங்கள் என்றார். ரூ.5 லட்சத்துக்கு டிக்கெட் வாங்கிய ரசிகர்: அகண்டா 2 படத்தின் டிக்கெட் ஜெர்மனி நாட்டின் பிராங்க்பார்ட் நகரில் ஏலத்திற்கு விடப்பட்டன. இதில் முதல் ரசிகர் டிக்கெட்டை ஆயிரம் யூரோக்களுக்கு வாங்கியுள்ளார். இது இந்திய மதிப்பில் 5 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் ஆகும். பாலையாவின் தீவிர ரசிகரான ராஜசேகர் பரணபள்ளி என்பவர் தான் இந்த டிக்கெட்டை வாங்கி இருக்கிறார்.