Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தமிழ் பட இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன்

தமிழில் வெளியான ‘வல்லமை தாராயோ’, ‘கொல கொலயா முந்திரிக்கா’, ‘மூணே மூணு வார்த்தை’, ‘கேடி என்கிற கருப்புதுரை’ ஆகிய படங்களை இயக்கியவர், மதுமிதா. தற்போது அவர் இந்தியில் அபிஷேக் பச்சன் நடித்திருக்கும் ‘காளிதர் லாபதா’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இது ‘கேடி என்கிற கருப்புதுரை’ என்ற படத்தின் இந்தி ரீமேக். இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மதுமிதா கூறுகையில், ‘தமிழில் நான் இயக்கிய ‘கேடி என்கிற கருப்புதுரை’ படத்துக்கு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதியவர் மற்றும் சிறுவனுக்கு இடையிலான நட்பை இப்படம் பேசியிருந்தது. இந்தி பதிப்புக்காக முதியவரை 50 வயது நிறைந்த நபராக மாற்றினோம். தமிழில் ‘தலைக்கூத்தல்’ விஷயத்தை வைத்திருந்தோம்.

வடநாட்டு கலாச்சாரப்படி, வயதானவர்களை கும்பமேளா அல்லது காசியில் தொலைத்துவிட்டு வந்துவிடுவதாக சொன்னார்கள். அதனால் சில மாற்றங்களுடன் இயக்கினேன். அபிஷேக் பச்சனுடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அடுத்து மலையாளத்தில் வெளியான ‘அங்கமாலி டைரிஸ்’ படத்தை இந்தியில் இயக்கியுள்ளேன். கதையில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளேன். இப்படத்தின் மூலம் கோலிவுட் வில்லனும், ஹீரோவுமான அர்ஜூன் தாஸ் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். கோவா பின்னணியில் உருவான இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணி நடந்து வருகிறது. அடுத்து ‘பாகுபலி’ படத்தை தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ்சுடன் இணைந்து தமிழ் படத்தை இயக்குகிறேன். திரில்லர் கதை கொண்ட இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது’ என்றார்.