Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தொடர்ந்து இலங்கை தமிழராக நடிப்பது ஏன்? சசிகுமார்

சென்னை: சசிகுமார், சிம்ரன் நடிப்பில் ஹிட்டான படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இதையடுத்து சசிகுமார் நடித்திருக்கும் ‘பிரீடம்’ என்ற படத்தை ‘கழுகு’ சத்யசிவா எழுதி இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் லிஜோமோல் ஜோஸ், சதீஷ் நாயர், மாளவிகா, போஸ் வெங்கட், ‘கேடி’ பேராசிரியர் மு.ராமசாமி நடித்துள்ளனர். ஜிப்ரான் வைபோதா இசை அமைத்துள்ளார். மோகன் ராஜன், அருண் பாரதி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். வரும் 10ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

சசிகுமார் கூறுகையில், ‘தற்போது மிகவும் வித்தியாசமான கதை மற்றும் கேரக்டர் கொண்ட படங்களில் நடித்து வருகிறேன். ஏற்கனவே நான் நடித்த ‘நந்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களின் வரிசையில் ‘பிரீடம்’ படமும் மறக்க முடியாததாக இருக்கும். 1995 ஆகஸ்ட் 14ம் தேதி வேலூரிலுள்ள சிறையில் இருந்து தப்பித்த இலங்கை அகதிகள் பற்றிய உண்மை சம்பவங்களை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. இது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட படம். இரண்டு படங்களிலும் இலங்கை தமிழராக நடித்துள்ளேன். இது தற்செயலாக நடந்த விஷயமாகும்’ என்றார்.

சத்யசிவா கூறும்போது, ‘தமிழகத்தில் நடந்த விஷயம் பலருக்கு தெரியவில்லை. அது என்ன என்பது சஸ்பென்ஸ். செய்யாத ஒரு தவறுக்காக சிறைக்கு செல்பவர்களின் வேதனையும், வலியும் எவ்வளவு கொடுமையானது என்பது தொடர்பான புரிதலை இப்படம் ஏற்படுத்தும்’ என்றார்.