Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஒன்றே முக்கால் கிலோ தங்கம் திருடிய நடிகை கைது

திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் தொண்டபர்த்தி பகுதியை சேர்ந்தவர் பிரசாத்பாபு (65). இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் வைத்திருந்த 1 கிலோ 750 கிராம் தங்க நகைகள் திருட்டு போனதாக பிரசாத்பாபு விசாகப்பட்டினம் போலீசில் புகார் கொடுத்தார். விசாரணைக்கு பிறகு போலீசார் கூறியதாவது: பிரசாத்பாபுவின் மகள் மவுனிகாவும், தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை சவுமியாஷெட்டியும் தோழிகள்.

சவுமியா இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிட்டு புகழ் பெற்றார். இதன்மூலம் தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஓரிரு சினிமா படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது தோழியான மவுனிகா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.  கடந்த ஜனவரி 29, பிப்ரவரி 19 ஆகிய தேதிகளில் மவுனிகா வீட்டிற்கு சென்ற சவுமியா படுக்கை அறையில் உள்ள பீரோவில் இருந்த தங்க நகைகளை சிறிது சிறிதாக திருடிச்சென்றுள்ளார். அவ்வாறு சுமார் 1 கிலோ 750 கிராம் தங்க நகைகளை திருடியுள்ளார்.

இதையடுத்து சவுமியாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது அவர் கோவாவில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்று நேற்று அவரை கைது செய்து விசாரித்தோம். அதில் மேற்கண்ட தகவல்கள் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவரிடமிருந்து 74 கிராம் தங்க நகைகள் மட்டுமே போலீசார் பறிமுதல் செய்தனர். மீதமுள்ள நகைகள் குறித்து கேட்டபோது, என்னை தொந்தரவு செய்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என போலீசாரை சவுமியா மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சவுமியாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.