Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தற்கொலையில் தப்பித்து ஆபரேஷனில் பலியான நடிகை

ஆர்த்தி அகர்வால். குஜராத்தைச் சேர்ந்த இவர், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி கண்ணில் படவே, அவர் மூலமாக 2001-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘பாகல்பன்’ படத்தின் மூலம் நாயகியாக சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு தெலுங்கில் அதே ஆண்டு அவர் நடிப்பில் மற்றொரு படம் வெளியானது. வெங்கடேஷ் நடிப்பில் உருவான ‘நுவ்வு நக்கு நச்சாவ்’ படம் மூலம் தெலுங்கில் நுழைந்த அவருக்கு அந்தப் படம் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. படமும் வெற்றியடைய, ஆர்த்தி அகர்வாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதன் மூலம் தொடர்ச்சியான பட வாய்ப்புகள் ஆர்த்தி அகர்வாலின் கதவை தட்டின.

இதன் மூலம், டோலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக முன்னேறினார் ஆர்த்தி. சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா, மகேஷ் பாபு, பிரபாஸ், ரவி தேஜா, தருண் போன்ற நட்சத்திர ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அவர் வெறும் கவர்ச்சியான வேடங்களில் மட்டும் நடிக்காமல், எதிர்மறை கதாபாத்திரங்களிலும் நடித்தார். தமிழில், ‘வின்னர்’ படத்தில் சிறப்பு தோற்றத்திலும், ‘பம்பர கண்ணாலே’ படத்திலும் நடித்தார். ஆனால் அவரது திரைப்பட வாழ்க்கை எவ்வளவு வெற்றிகரமாக இருந்ததோ, அதே அளவுக்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் பல திருப்பங்களை கொண்டிருந்தது.

சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது, ஆர்த்தி குறித்த பல வதந்திகள் பரவின. அந்த நேரத்தில் அவருக்கு ஒரு டோலிவுட் ஹீரோவுடன் காதல் இருப்பதாக பல செய்திகள் வந்தன. 2005 ஆம் ஆண்டில், கடுமையான மன அழுத்தம் காரணமாக ஆர்த்தி தற்கொலைக்கு முயன்றார். அதிர்ஷ்டவசமாக, அவருக்கு எதுவும் ஆகவில்லை. 2007 ஆம் ஆண்டில், நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஐடி ஊழியரான உஜ்வால் நிகாமை மணந்தார். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால், திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. அவர்கள் விவாகரத்து செய்தனர். பின்னர் உடல் எடை கூடி ஆர்த்தி அல்லல்பட்டார்.

இதனால் எடை குறைக்க ஆபரேஷன் செய்தார். இந்த அறுவை சிகிச்சையின்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்தார். இப்போதைய 2கே கிட்ஸ்களுக்கு ஆர்த்தியை தெரியவில்லை. ஆனால் குறுகிய காலத்திலேயே பிரபலமாகி, தென்னிந்திய சினிமாவில் கோலோச்சிவிட்டு சென்ற வெற்றி நடிகையாக அவர் இருந்தார்.