Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அதர்ஷ்: விமர்சனம்

திடீரென்று வேன் வெடித்து சிதறி, அதிலிருந்த அனைவரும் தீயில் சிக்கி பலியாகின்றனர். அந்த வழக்கை போலீஸ் உயர் அதிகாரி ஆதித்யா மாதவன், இன்ஸ்பெக்டர் அஞ்சு குரியன் விசாரிக்கின்றனர். அந்த விபத்து தற்செயலானது அல்ல, திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலைகள் என்று தெரிய வருகிறது. ஹரீஷ் பெராடி நடத்தி வரும் குழந்தை கருவுறுதல் மருத்துவமனையின் டாக்டர் கவுரி கிஷன், மருத்துவமனையில் நடந்த சில மோசடிகளை கண்டுபிடித்து புகார் செய்கிறார். ஆதித்யா மாதவன் விசாரிக்கும் வழக்கிற்கும், கவுரி கிஷன் கண்டுபிடித்த மோசடிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அறிந்து அனைவரும் அதிர்கின்றனர். கொலைகளுக்கான காரணம் என்ன? கொலையாளி யார் என்பது மீதி கதை.

போலீஸ் கேரக்டரில் கச்சிதமாக பொருந்தியுள்ள புதுமுகம் ஆதித்யா மாதவன், நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் ஆவேசமாக ‘அடி’த்திருக்கிறார். அவருக்கும், கவுரி கிஷனுக்குமான காதல் இதமாக இருக்கிறது. வில்லனின் வளையத்தில் இருந்து கவுரி கிஷன் தப்பிக்கும் காட்சி பதற வைக்கிறது. கதையின் திடீர் திருப்பத்துக்கு கவுரி கிஷன் முக்கிய பங்கு வகிக்கிறார். மற்றும் அஞ்சு குரியன், முனீஷ்காந்த், மாலா பார்வதி, ஆர்.சுந்தர்ராஜன், நண்டு ஜெகன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். வித்தியாசமான நடிப்பில் திருநம்பியாக வரும் சுமேஷ் மூர், இறுதியில் உருக வைக்கிறார்.

மெடிக்கல் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லருக்கு ஏற்ற ஒளிப்பதிவை அரவிந்த் சிங் வழங்க, பின்னணி இசையில் ஜிப்ரான் வைபோதா அதிர வைத்துள்ளார். பிற்பகுதியில் கொலைகளுக்கான காரணம் தெரியும்போது, கல்மனமும் கரைந்துவிடுகிறது. இன்றைய சமூகத்தின் மிகப்பெரிய சிக்கலான பிரச்னையை இயக்குனர் அபின் ஹரிஹரன் திரையில் அணுகிய விதம் பாராட்டுக்குரியது. குழந்தை கருவுறுதல் மையங்களில் இப்படியும் கூட நடக்குமா என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. ‘அதர்ஸ்’ என்ற டைட்டிலுக்கான அர்த்தத்தை அறியும்போது, கதையின் மீது மரியாதை ஏற்படுகிறது. அதேவேளையில், இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு என்ற கேள்வியும் எழாமல் இல்லை. முற்பகுதியில் வசன காட்சிகளை குறைத்திருக்கலாம்.