Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மகளுக்கு தடை போட்ட ஐஸ்வர்யா ராய்

இந்தியில் அபிஷேக் பச்சன் நடித்த ‘காளிதர் லாபட்டா’ படம், ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதையொட்டி ஒரு நிகழ்ச்சியில் பேசிய அபிஷேக் பச்சன், `எனது மகள் ஆராத்யா பச்சனிடம், என் தந்தை அமிதாப் பச்சன் மிகப்பெரிய நடிகர், என் மனைவி ஐஸ்வர்யா ராய் உலகப் புகழ்பெற்ற நடிகை என்று ஒருநாள் கூட நான் பேசியது கிடையாது. அவள் இப்போது நன்கு வளர்ந்துவிட்டாள். எல்லா விஷயங்களையும் சட்டென்று புரிந்துகொள்கிறாள். இதற்கான பெருமை முழுவதும் ஐஸ்வர்யா ராயையே சேரும். ஒரு கணவனாக எனக்கு சுதந்திரம் இருக்கிறது. நான் வெளியே சென்று என் படத்துக்கான பணிகளை செய்கிறேன்.

என் மனைவி ஐஸ்வர்யா, மகள் ஆராத்யாவுடன் இணைந்து குடும்பத்தை கவனித்துக்கொள்கிறார். அவர் அற்புதமானவர், தன்னலமற்றவர். இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. தாயை போல் குழந்தைகளுக்கு எது, எப்போது தேவையோ அதை கொடுக்கும் திறன் ஒரு தந்தைக்கு இல்லை என்று நினைக்கிறேன். ஒரு குழந்தைக்கும், தாய்க்குமான உறவு வேறு வழியில் இணைக்கப்பட்டுள்ளது. இது அம்மாக்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள அரிய பரிசு. என் அம்மாவுக்கு 76 வயது, எனக்கு 49 வயது. என்றாலும், இப்போது கூட என் அம்மாவுக்கு நான் ரொம்ப ஸ்பெஷல். அதுதான் ஒவ்வொரு குழந்தைக்கும் நடக்கிறது.

எவ்வளவு வயதானாலும் சரி, உங்கள் அம்மாவிடம் நீங்கள் எப்போதும் ஒரு குழந்தையாகவே இருப்பீர்கள். ஆராத்யா எந்த சமூக ஊடகத்திலும் இல்லை. அவளிடம் செல்போன் கூட கிடையாது. அதற்கு காரணம் ஐஸ்வர்யா ராய். ஆராத்யா பச்சன், எங்கள் குடும்பத்தின் பெருமை மற்றும் மகிழ்ச்சி. உண்மையிலேயே நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்’ என்றார். சோஷியல் மீடியாவில் இருக்கக்கூடாது என்று மகளுக்கு தடை போடுவது நியாயமா என்று, நெட்டிசன்கள் கேட்டுள்ளனர்.