சென்னை: அஜித் நடிக்கும் புதிய படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லன் அல்லது முக்கிய வேடத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது. ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித்குமார் தனது அடுத்த படத்திற்காக மீண்டும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைகிறார். தற்போது இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘ஏகே 64’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் என அஜித் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
‘ஏகே 64’ தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் இணைந்து நடிக்கப்போகிறார்கள் என்ற செய்தி தற்போது சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவர்கள் இருவரும் வில்லன் கதாபாத்திரங்களா அல்லது வேறு முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களா என்பது இதுவரை எந்தவித தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.
