Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அலியா பட்டிடம் ரூ.77 லட்சம் மோசடி: மாஜி பெண் உதவியாளர் கைது

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை அலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளரான வேதிகா பிரகாஷ் ஷெட்டி (32), நடிகைக்கு சொந்தமான சினிமா தயாரிப்பு நிறுவனம் மற்றும் அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் ரூ.77 லட்சம் மோசடி செய்துள்ளார். கடந்த 2021 முதல் 2024ம் ஆண்டு வரை அலியா பட்டின் உதவியாளராகப் பணிபுரிந்த வேதிகா, நடிகையின் நிதி ஆவணங்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் பயணத் திட்டங்கள் போன்ற முக்கிய பொறுப்புகளைக் கவனித்து வந்துள்ளார்.

இந்த காலகட்டத்தில், அதாவது மே 2022 முதல் ஆகஸ்ட் 2024 வரை, அவர் போலியான பில்களைத் தயாரித்துள்ளார். நடிகையின் பயணம், கூட்டங்கள் மற்றும் இதர ஏற்பாடுகளுக்காக ஆகும் செலவுகள் எனக் கூறி, அந்தப் போலி பில்களில் ஆலியா பட்டிடம் கையொப்பம் பெற்றுள்ளார். பின்னர், அந்தப் பணத்தைத் தனது நண்பரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றி, அங்கிருந்து மீண்டும் தனது சொந்தக் கணக்கில் வரவு வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிதி மோசடி குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், அலியா பட்டின் தாயாரும், நடிகையுமான சோனி ரஸ்தான், கடந்த ஜனவரி 23 அன்று மும்பை ஜுஹு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த வேதிகா ஷெட்டியை பெங்களூருவில் கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.