Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆந்திரா மதுபான ஊழல்: தமன்னா சிக்குகிறார்

ஐதராபாத்: ஆந்திராவில் கடந்த 2019 முதல் 2024ம் ஆண்டு வரையிலான ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் 3500 கோடி ரூபாய் அளவில் மதுபான ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஊழலை நடிகை ரம்பாவின் சகோதரர் வெங்கடேஸ்வர ஸ்ரீனிவாசராவ் கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அந்தவகையில் தற்போது நடிகை தமன்னாவுக்கு இதில் தொடர்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்காக தமன்னாவும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். கைதானவர்களில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டி மற்றும் அவரது உதவியாளர் வெங்கடேஷ் நாயுடு முக்கியமானவர்கள். சமீபத்தில் வெங்கடேஷ் நாயுடு கட்டு கட்டாக பணத்தை வைத்திருந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த மோசடி பணத்தின் மூலம் நடிகை தமன்னா நடத்தி வரும் ‘ஒயிட் அண்ட் கோல்டு’ கம்பெனி கிட்டத்தட்ட 300 கிலோ வரை தங்கம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் வெங்கடேஷ் நாயுடுவுடன் தனி விமானத்தில் நடிகை தமன்னா சென்ற புகைப்படம் வெளியாகி வைரலானது. இதனால் இந்த மோசடியில் நடிகை தமன்னாவிற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த செய்தி தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் பல அரசியல் பிரபலங்கள், முக்கிய புள்ளிகள் மற்றும் திரைப்பிரபலங்களும் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.