Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அனுபமாவை அவமானப்படுத்திய ஆடிஷன்

மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், தமிழில் ‘கொடி’, ‘தள்ளிப் போகாதே’, ‘சைரன்’, ‘டிராகன்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’ என்ற படத்தில் துருவ் விக்ரமுடன் நடித்துள்ளார். தவிர, ‘லாக்டவுன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், தான் அவமானப்பட்ட சம்பவம் குறித்து அவர் கூறுகையில், ‘பட வாய்ப்பு தேடி அலைந்தபோது, முதன்முதலாக ஆடிஷன் ஒன்றிற்கு சென்றிருந்தேன். என்னிடம் சில போட்டோக்கள் மட்டுமே இருந்தது. நடிப்பதற்கு உதாரணமாக வீடியோ இல்லை. ஸ்கிரிப்ட்டை என் கையில் கொடுத்து நடிக்க சொன்னார்கள். இதுதான் ஸ்கிரிப்ட்டா என்று ஆச்சரியமாக பார்த்தேன். ஒருவர் ‘ஆக்‌ஷன்’ என்று சொன்னவுடன் நடித்தேன். நான் நடித்தது சரியில்லை என்று மீண்டும் நடிக்க சொன்னார். மறுபடியும் நடித்தேன். அதுவும் அவருக்கு பிடிக்கவில்லை.

மீண்டும் நடித்தேன். ‘நல்லாத்தான் நடிச்சிங்க. நம்பிக்கையோட இருங்க. நாங்க கூப்பிடுறோம்’ என்றார். பிறகு அவர் என்னை அழைக்கவே இல்லை. இனி நிச்சயம் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காது என்று நினைத்து, கண்ணாடியை பார்த்து நடிக்க பழகினேன். அதுவே நடிப்பை கற்றுக்கொள்ள சிறந்த வழி என்றார்கள். வாழ்க்கையில் முதல்முறையாக சந்தித்த நிராகரிப்பு மற்றும் அவமானத்தை எப்போதும் மறக்க மாட்டேன்’ என்ற அவர், தற்போது அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.