பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப், தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘லியோ’, ‘மகாராஜா’, ‘விடுதலை 2’, மலையாளத்தில் ‘ரைபிள் கிளப்’ படத்திலும் நடித்துள்ளார். தமிழில் ‘துரோகி’, ‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப்போற்று’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘பராசக்தி’ என்ற படத்தை இயக்கி வரும் சுதா கொங்கரா, சமீபத்தில் அனுராக் காஷ்யப்பை சந்தித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நாங்கள் கடைசியாக சந்தித்து 15 ஆண்டுகளாகிறது. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் மற்றும் இயக்குனர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப்.
அவரை நான் 25 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்து பேசிய முதல் நாள் எனக்கு நினைவில் இருக்கிறது. மணிரத்னத்துக்கும், அனுராக் காஷ்யப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், மொழி பெயர்ப்பதில் நான் ஒரு பாலமாக இருந்தேன். அனுராக் காஷ்யப் மூன்று மணி நேரத்திலேயே என்னை டீக்கோட் செய்துவிட்டார். இருளை சார்ந்தவர் அனுராக் காஷ்யப். சூரிய ஒளியை போன்றவள் நான். அவர் எப்போது ஒரு காதல் கதையை எழுதி எனக்கு தரப்போகிறார் என்று தெரியவில்லை’ என்றார்.
