Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆயுர்வேத மருத்துவம் பேசும் ஆயுர்வேதா தி டபுள் ஹெலிக்ஸ் லைஃப் ஆவணப்படம்

சென்னை: ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கியத்துவம், அதன் உலகளாவிய சுகாதார பராமரிப்பை மறுவடிவமைப்பது பற்றி பேசும் ஆவணப்படம் ‘தி டபுள் ஹெலிக்ஸ் லைஃப்’. 90 நிமிடம் உள்ள இந்த ஆவணப்படத்தை தேசிய விருது வென்ற வினோத் மன்கரா இயக்கியுள்ளார். ஏவிஏ புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மருத்துவர் ஏ.வி.அனூப் மற்றும் இந்திய ஆயுர்வேத மருந்து உற்பத்தியாளர்கள் அமைப்பு (AMMOI) இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் உள்ள பிலிம் டிவிஷனில் இப்படம் ஒளிபரப்பப்பட்டது. இதில், ஒன்றிய ஆயுஷ் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பிரதாப் ஜாதவ் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய ஆயுர்வேத மருந்து உற்பத்தியாளர்கள் அமைப்பின் தலைவர் பி.ராம்குமார், பொருளாளர் இ.டி.நீலகண்டன் மூஸ், பேராசிரியர் ரபிநாராயன், வைத்யா பாலேந்து பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆயுர்வேத மருத்துவம் அறிவியல் பூர்வமற்றது, வெறும் நம்பிக்கையின் பேரில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என்ற விவாதத்தை இப்படம் முன்வைக்கிறது. இப்படத்தை உருவாக்க பல ஆண்டுகள் இந்தியா மற்றும் ஐரோப்பா முழுவதும் 1000க்கும் மேற்பட்ட நிபுணர்களின் உதவியுடன் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்கள், ஓடிடி யில் பல மொழிகளில் வெளியிட இருக்கிறோம். ஆவணப்படம் குறித்து இயக்குனர் வினோத் மன்கரா பேசும்போது, ‘‘ஆயுர்வேதா நமது நாட்டின் மரபு, எதிர்கால தீர்வு மற்றும் நம்மில் ஆதாரத்துடன் வேரூன்றியுள்ளது. சுவிட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் ஆயுர்வேதா மருத்துவ காப்பீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் இது கொண்டுவரப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.