Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பேட் கேர்ள், மனுஷி படங்களுக்கு பிரச்னை: பட தயாரிப்பில் இருந்து விலகுகிறார் வெற்றிமாறன்

சென்னை: இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘பேட் கேர்ள்’. அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷாங்க் பொம்மிரெட்டிபள்ளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமித் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் வரும் 5ம் தேதி வெளியாகும் ‘பேட் கேர்ள்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் வெற்றிமாறன் பேசியது: ஒரு இயக்குனராக இருப்பது சுதந்திரமாக இருக்கும். நமக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்து முடித்துவிட்டு போகலாம். ஆனால் ஒரு தயாரிப்பாளராக இருப்பது மிகுந்த அழுத்தத்தைத் தருகிறது. இயக்குனர் வர்ஷா முதல் 45 நிமிட கதையை என்னிடம் சொன்னார்.

அப்போது, நாம் ‘அழியாத கோலங்கள்’, ‘துள்ளுவதோ இளமை’ போன்ற வெவ்வேறு சூழல்களில் வெளியான 18 பிளஸ் படங்களைப் பார்த்திருப்போம். அந்தப் படங்கள் அனைத்தும் ஒரு ஆண் வளர்ந்து வரும்போது பதின் பருவத்தில் அவனுக்கு ஏற்படும் மாற்றங்களை அவன் எப்படி கையாளுகிறான், அதனை எப்படி எதிர்கொள்கிறான். சமூகத்தோடு எப்படி பொறுத்திக்கொள்கிறான் என்பது பற்றி மட்டும்தான் இருந்தது. ஆனால் இந்தக் கதையில் ஒரு பெண் தனது பதின்பருவத்தில் எந்த மாதிரியான விஷயங்களை எதிர்கொள்கிறாள் என்று இருந்தது. குறிப்பாக காமெடியான முறையில் அந்த விஷயங்களை வர்ஷா சொல்லியிருக்கிறார். அதனால் இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னை மாதிரியான ஆட்களுக்கு படத் தயாரிப்பு என்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாகும். கடன் வாங்கி படம் எடுக்கிறோம். இதற்கு முன் நான் தயாரித்த ‘மனுஷி’ படம் கோர்ட்டுக்கு போயிருக்கிறது. இந்தப் படத்திற்கும் நிறைய பிரச்னைகள் இருந்தன. அதனால் ‘பேட் கேர்ள்’ படம்தான் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனியின் மூலம் நான் தயாரிக்கும் கடைசி படமாக இருக்கும். அதன்பிறகு கடையை இழுத்து மூடுகிறோம். என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் பட தயாரிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.