Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘பாலன்’ படத்தின் வியப்பூட்டும் பின்னணி

‘மலையாள திரையுலகின் தந்தை’ என்று சொல்லப்படும் ஜே.சி.டேனியல் தயாரித்து எழுதி இயக்கி ஹீரோவாக நடித்த மவுன படம், ‘விகதகுமாரன்’. கடந்த 1928 அல்லது 1930ல் திரைக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது இது காணாமல் போன படங்களின் லிஸ்ட்டில் இருக்கிறது. பி.கே.ரோஸி ஹீரோயினாக நடித்தார். இதையடுத்து மலையாளத்தில் வெளியான மவுன படம், ‘மார்த்தாண்ட வர்மா’. 1933ல் பி.வி.ராவ் இயக்கிய இப்படத்தின் ஒரு பிரதி, புனே தேசிய திரைப்பட ஆவண காப்பக மையத்தில் பாதுகாப்பாக இருக்கிறது. தென்னிந்தியாவில் ரிலீசான கருப்பு / வெள்ளையில் உருவான மவுன படங்களில், இது மட்டுமே பாதுகாக்கப்படும் பெருமையை பெற்றுள்ளது.

இதையடுத்து மலையாளத்தில் ரிலீசான 3வது படம், ‘பாலன்’. 1938ல் மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் டி.ஆர்.சுந்தரம் தயாரிக்க, எஸ்.நோட்டானி இயக்கினார். இது மலையாள மொழியில் வெளியான முதல் பேசும் படமாகும். இந்த விளக்கம் இப்போது ஏன் சொல்லப்படுகிறது தெரியுமா? மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி ஹிட்டான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் சிதம்பரம் எஸ்.பொதுவால், தனது அடுத்த படத்துக்கு ‘பாலன்’ என்று பெயரிட்டுள்ளார். பஹத் பாசில் நடிப்பில் ஹிட்டான ‘ஆவேஷம்’ என்ற படத்தை இயக்கிய ஜித்து மாதவன் கதை, திரைக்கதை எழுதுகிறார். ‘பாலன்: தி பாய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் போஸ்டரில் சட்டையின்றி, கருப்பு நிற ஷார்ட்ஸ் அணிந்து, கையில் ஒரு குச்சி பிடித்த சிறுவன் நடந்து செல்கிறான்.

அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இப்படத்தை கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ், தெஸ்பியன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. மலையாளத்தில் கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் முதல் படம் இது. இந்தியில் பிரியதர்ஷன் இயக்கும் திரில்லர் படத்தையும், தமிழில் ஹெச்.வினோத் இயக்கும் ‘ஜன நாயகன்’ என்ற படத்தையும், நடிகை கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் ‘தி டாக்ஸிக்’ என்ற பான் இந்தியா படத்தையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘பாலன்’ படத்தை வெங்கட் கே.நாராயணா, ஷைலஜா தேசாய் ஃபென் தயாரிக்கின்றனர். ஷைஜூ காலித் ஒளிப்பதிவு செய்ய, சுஷின் ஷியாம் இசை அமைக்கிறார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார்.