எஸ்டிகே ஃபிரேம்ஸ் மற்றும் பினு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகம் , சாந்தனு, , செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் " பல்டி".
உதயன் (ஷேன் நிகம்), குமார் ( சாந்தனு பாக்கியராஜ் ), உள்ளிட்ட நான்கு கபடி நண்பர்கள். உள்ளூர் கபடி போட்டிகள், வெற்றி, கோப்பை , காதல் என சந்தோஷமாக சுற்றித் திரிகிறார்கள். இன்னொரு புறம் பொற்த்தாமரை பைரவா (செல்வராகவன்) , சோடா பாபு ( அல்போன்ஸ் புத்திரன்), ஜி- மா ( பூர்ணிமா மோகன்) ஆகிய மூவரும் கந்து வட்டி, கஞ்சா, உள்ளிட்ட அத்தனை சட்டத்துக்கு புறம்பான வேலைகளையும் செய்து வரும் லோக்கல் தாதாக்கள். ஒருவருக்கொருவர் யார் பெரிய ஆள் என போட்டியும் நடந்து வருகிறது. இவர்களின் கருவியாக மாற்றப்படுகிறார்கள் பல்டி கபடி பாய்ஸ். ஏன் எதற்காக எப்படி, விளைவு என்ன என்பது மீதி கதை.
ஷேன் நிகம் திறமையான கலைஞர் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது. கதாநாயகியை கூட கவனிக்க விடாமல் நடிப்பில் அப்படி அசத்துகிறார். கூட்டத்தில் எத்தனை பேர் நின்று கொண்டு இருந்தாலும் இவரைத் தாண்டி வேறு ஒருவர் மீது கவனம் செலுத்த முடியவில்லை. அந்த அளவிற்கு எதார்த்தமான நடிப்பு. சாந்தனு நிச்சயம் இந்த படம் அவருக்கு " ப்ளூ ஸ்டார் " போல் மிக முக்கிய படமாக இருக்கும். அவருக்கும் சரிசமமான கதாபாத்திரம் அதை சரியாக கையாண்டு தனது நடிப்பை கொடுத்திருக்கிறார். நல்லவரா கெட்டவரா என குழப்பம் ஏற்படுத்தும் விதமான ஒரு கதாபாத்திரம். அதை அற்புதமாகவே செய்திருக்கிறார்.
தொடர்ந்து கவனம் பெறுகிறார்கள் செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், குறிப்பாக பூர்ணிமா மோகன். மூவரும் அவரவருக்கு கொடுத்த பாத்திரத்தில் வித்தியாசமாகவே புகுந்து விளையாடி கதையை தூக்கி நிறுத்துகிறார்கள். சிரித்துக் கொண்டே வேட்டையாடும் செல்வராகவன், கோமாளி போல் கொலை நடுங்க வைக்கும் அல்போன்ஸ் புத்திரன், இருவருக்கும் இடையே நரி போல ஆடும் பூர்ணிமா மோகன் என மூவரும் மூன்று விதமான கதாபாத்திரங்கள். ப்ரீத்தி அசராணி தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் கதாநாயகியாக நடித்து கவனம் பெற்று வருகிறார். இந்தக் கதையிலும் காதல் மட்டும் இன்றி கதையிலும் பயன்பட்டு இருக்கிறார்.
அலெக்ஸ் ஜே புலிக்கள் ஒளிப்பதிவில் காட்சிகள் எதார்த்தமாகவும், உண்மைக்கு மிக நெருக்கத்திலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மற்றும் கேரளா பார்டர் உணர்வை திரைக்கதை முழுக்க பரவ விட்டு நமக்கும் அந்த உணர்வை கொடுத்திருக்கிறார் இயக்குனர். பாடல்கள் முதல் பின்னணி இசை வரை அனைத்திலும் தமிழ் மற்றும் மலையாள பண்பாடு கலாச்சாரம் என கலந்து கட்டி அடித்து முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். குறிப்பாக பின்னணி இசை படத்திற்கு இன்னொரு மிகப்பெரிய பலம். கிளைமாக்ஸ் காட்சியில் சாய் இன்னொரு ஹீரோவாகவே ஜொலிக்கிறார்.
வழக்கமான கபடி விளையாட்டு, வெள்ளந்தி இளைஞர்கள், அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் ரவுடி கும்பல் என பழக்கப்பட்ட கதையாக இருப்பினும் திரைக்கதையில் ராவான உணர்வை கொடுத்து, எதார்த்தமான கதை சொல்லலில் பாராட்டு பெறுகிறார் இயக்குனர். சண்டை காட்சிகளும் கபடி விளையாட்டும் கூட எதார்த்தமாகவும் சினிமாத்தனம் இல்லாமலும் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கபடி தான் கதையின் கரு என் கையில் அதை இன்னும் ஆழமாக காட்டி இருக்கலாம். மொத்தத்தில் கதையில் மட்டுமல்லாமல் கதையின் நடிகர்களிலும் தமிழ் மற்றும் மலையாளம் என சரிசமமாக கலந்து கச்சிதமான கமர்சியல் ஆக்ஷன் படமாக மாறி இருக்கிறது இந்த " பல்டி