அப்ளாஸ் என்டர்டெயின்ட்மென்ட், நீலம் புரடக்ஷன் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அமீர், பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “பைசன்”.
சிறு வயதிலிருந்தே கபடியில் திறமையையும் கனவையும் வளர்த்துக் கொள்கிறான் வனத்தி கிட்டா (துருவ் விக்ரம்). ஆனால் சாதி என்ற சமூகச் சுவர் அவன் பாதையில் நின்று விடுகிறது. மகன் கையில் கத்தி எடுப்பானோ என்ற அச்சத்தில் அவனது கனவைக் கட்டுப்படுத்த முயல்கிறார் தந்தை வேலுசாமி (பசுபதி). இதே சமயம் பாண்டியராஜா (அமீர்) – கந்தசாமி (லால்) இடையேயும் ஜாதி மரபு மோதல் நடக்கிறது. இந்த சூழலில் கிட்டா தனது கனவுகளை அடைகிறானா என்பதே கதை.
துருவ் விக்ரம் முழு அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். உடல் மொழி, உணர்ச்சி, தீவிரம் — அனைத்திலும் முழுமையாக மூழ்கி நடிக்கிறார். பசுபதி கதையின் உயிர். மகனுக்காக அச்சப்படும் தந்தையாக அவ்வளவு உணர்வுகளை கொடுத்திருக்கிறார். அமீர், லால் இருவரும் தங்கள் பாத்திரங்களில் வலிமையாகத் தோன்றுகிறார்கள். ரஜிஷா விஜயன் ஊரின் பாரம்பரியக் கட்டுப்பாடுகளில் சிக்கிய மகளாக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். அனுபமா பரமேஸ்வரன் இயல்பான காதலையும் , ஏக்கத்தையும் திரையில் கொடுத்திருக்கிறார்.
விளையாட்டு திரைக்கதை மூலம் சமூகச் சாதி அரசியலைப் பேசும் மாரி செல்வராஜ், இந்த முறை “உள் ஜாதி” மோதல்களில் ஒடுக்கப்படும் திறமையை அடையாளப்படுத்தும் வேலையை செய்திருக்கிறார்.
எழிலரசு ஒளிப்பதிவு படத்தின் பெரும் பலம். திருநெல்வேலியின் இயற்கையும் மண்ணின் வாசனையும் திரையில் உயிருடன் தெரிகிறது. நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை உணர்வுகளை ஊட்டி நிற்கிறது. சக்தி திருவின் எடிட்டிங் படத்தின் ஓட்டத்தை நன்றாகக் கையாளுகிறது.
மொத்தத்தில் "பைசன்" , ஒவ்வொரு படத்திலும் தான் உழன்று, கடந்து வந்த சாதி அடக்குமுறையை எதார்த்தமாக எடுத்து வைக்கும் மாரி செல்வராஜ் இந்தப் படத்திலும் அதை இன்னும் ரத்தமும் சதையுமாக எடுத்துவைத்து சமூகத்தைக் கேள்வி கேட்டிருக்கிறார். கொஞ்சம் முயன்றால் திறமை ஒன்றை மட்டும் வைத்து பல தடைகளை உடைத்து நம்மில் எத்தனையோ கிட்டாக்கள் மேலே வருவார்கள் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் மாரி செல்வராஜ்.