தூத்துக்குடி மாவட்டம் மணத்தி கிராமத்தில் பிறந்த பி.கணேசன், சிறந்த கபடி வீரருக்கான அர்ஜூனா விருது பெற்றார். இச்சம்பவத்தை மாரி செல்வராஜ் திரைப்படமாக எழுதி இயக்கியுள்ளார். சொந்த ஊரிலுள்ள கபடி அணியினராலேயே புறக்கணிக்கப்படும் துருவ் விக்ரம், கபடிதான் உயிர்மூச்சு என்று வாழ்கிறார். இந்திய அணி சார்பில் விளையாடி ஜெயிக்க வேண்டும் என்ற அவரது லட்சியத்துக்கு தந்தை பசுபதி முட்டுக்கட்டை போடுகிறார். அக்கா ரஜிஷா விஜயனும், விளையாட்டு ஆசிரியர் ‘அருவி’ மதனும் துருவ் விக்ரமுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
இந்நிலையில், தங்கள் சமூக உயர்வுக்காக அமீர், லால் கோஷ்டி கடுமையாக மோதிக்கொள்கின்றனர். அவர்களுக்கு மத்தியிலும், விளையாட்டு துறையில் நடக்கும் சூழ்ச்சியிலும் சிக்கி சின்னாபின்னமாகும் துருவ் விக்ரம், ஜப்பானில் நடக்கும் கபடி போட்டியில் இந்திய அணி சார்பில் வெல்லும் கடினமான போராட்டமே படமாகியுள்ளது. 1990களில் கதை நடக்கிறது. மணத்தி கணேசனின் போராட்டங்களை உள்வாங்கி, கிட்ணாவாகவே வாழ்ந்துள்ளார் துருவ் விக்ரம். தென்மாவட்ட கதைக்களத்தில், சாதிய கலவரத்தில் சிக்கித்தவிக்கும் மனவலியை தனது முகத்திலும், பாடிலாங்குவேஜிலும் அற்புதமாக கொண்டு வந்திருக்கும் அவர், சண்டைக்காட்சிகளில் உயிரை பணயம் வைத்து ‘அடி’த்திருக்கிறார்.
அனுபமா பரமேஸ்வரனுடனான காதல் காட்சிகளில் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, அக்காவின் ஆறுதல் வார்த்தைக்கு சந்தோஷப்பட்டு, சாதிய வன்முறையில் பொங்கியெழுந்து, அடக்கி ஒடுக்கப்பட்ட துறையில் விஸ்வரூபம் எடுத்து, ஒரு கம்ப்ளீட் ஆக்டராக அட்டகாசம் செய்துள்ள துருவ் விக்ரமுக்கு விருதுகள் கிடைக்கும். ‘என் மகன்’ என்று விக்ரம் பெருமைப்படலாம். அனுபமா பரமேஸ்வரனும், ரஜிஷா விஜயனும் போட்டி போட்டு நடித்துள்ளனர். அனுபமா பரமேஸ்வரனும், துருவ் விக்ரமும் முத்தமிடும் காட்சி, ரசிகர்களுக்கு உற்சாக டானிக்.
தங்கள் சமூகத்துக்காக போராடும் அமீர், லால் ஆகியோரின் ஈகோ யுத்தம், அந்த சமூகத்தினரை எந்தளவுக்கு திசை மாற்றுகிறது என்பது தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இருவரும் கம்பீரமான நடிப்பில் மனதில் பதிகின்றனர். பசுபதியின் தந்தை பாசம் நெகிழவைக்கிறது. அனுபமா பரமேஸ்வரனின் அண்ணன் கண்ணன் ஆக்ரோஷமாகவும், ‘அருவி’ மதன் அமைதியாகவும் நடித்து கவனத்தை ஈர்க்கின்றனர். மற்றும் ஆனந்த் அரோரா, சுபத்ரா ராபர்ட், அழகம்பெருமாள், ரேகா நாயர், ஹரிதா, ஊர் மக்கள் அனைவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர்.
சாதிக்க துடிக்கும் துருவ் விக்ரமுக்கு ஆதரவாக அமீர் பேசும் வசனங்கள் சிறப்பு. கே.எழில் அரசுவின் ஒளிப்பதிவு நேர்த்தி. கபடி விளையாட்டை நேரில் பார்ப்பது போலிருக்கிறது. நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் கதைக்கேற்ப பயணிக்க, பின்னணி இசை படத்தின் ஆன்மாவை தூக்கி நிறுத்துகிறது. ஒடுக்கப்பட்ட இளைஞன், தடைகளை உடைத்து முன்னேறுவதை காதல், அரசியல், சாதிய சண்டைகளை கலந்து கொடுத்திருக்கும் மாரி செல்வராஜ், நல்ல படம் தந்துள்ளார்.