தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய ெமாழிகளில் நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், ஹாரர் படங்கள் குறித்து கூறுகையில், ‘எனக்கு ஹாரர் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். சிறுவயதில் என் பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக பேய் படங்கள் பார்ப்பேன். அதாவது, என் பெற்றோர் தூங்க சென்ற பிறகு ஹாரர் படங்களை பார்த்து ரசிப்பேன். அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு இருட்டில் பார்ப்பேன். எந்த பேய்க்கும் நான் பயப்பட்டது கிடையாது’ என்றார்.
இந்நிலையில், துருவ் விக்ரம் ஜோடியாக அவர் நடித்துள்ள ‘பைசன்’ என்ற படம் வரும் 17ம் தேதி திரைக்கு வருவதை முன்னிட்டு அளித்த பேட்டியில், ‘கதைப்படி நான் திருநெல்வேலியை சேர்ந்த ராணி என்ற கிராமத்து பெண்ணாக நடித்துள்ளேன். மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்திலேயே நான் நடித்திருக்க வேண்டியது. ஆனால், அப்போது அது நடக்கவில்லை. எனக்கு மட்டுமல்ல, என் அப்பாவுக்கும் மிகவும் பிடித்த படமாக ‘பரியேறும் பெருமாள்’ இருந்தது. மாரி செல்வராஜ் இயக்கும் படங்களின் டிரைலர், டீசர் உள்பட முக்கிய அறிவிப்புகளை கூட ஆர்வமாக பார்ப்பேன். அப்படிப்பட்ட நான், ‘பைசன்’ படத்துக்காக எனக்கு அழைப்பு வந்தபோது மறுக்காமல் ஒப்புக்கொண்டேன்.
‘பிரேமம்’ படத்தில் நடித்தபோது எனக்கு ஒரு மனநிறைவு கிடைத்தது. நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். அந்த அனுபவம் ‘பைசன்’ படத்தில் நடித்தபோது கிடைத்தது. வயல்களில் இறங்கி நாற்று நடுவது, செங்கல் சூளையில் பணியாற்றுவது என்று, நிறைய புதிய அனுபவங்கள் கிடைத்தது. அங்கு திருநெல்வேலி மக்களுடன் பேசியதும், பழகியதும் அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது. துருவ்வுக்கு அக்காவாக நடித்த ரஜிஷா விஜயனும், நானும் நெருங்கிய தோழிகளாகி விட்டோம்’ என்றார்.