சென்னை: விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாண்புமிகு பறை’. படத்தில் பறை இசை கலைஞராக லியோ சிவகுமார் நடித்துள்ளார். கதாநாயகியாக காயத்ரி ரீமா ரமா, ஆரியன், ஜெயக்குமார், நந்தகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவா இசை அமைத்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய கலையான பறை இசையை பெருமைப்படுத்தும் வகையில் இந்த படம் உருவாகி உள்ளது. படம் குறித்து இசையமைப்பாளர் தேவா கூறியதாவது: இத்தாலி மற்றும் வெளிநாடுகளில் திரைப்பட விழாக்களில் இந்த படம் பங்கேற்று விருதுகளை வாங்கி உள்ளது.
நடைபெற இருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் படம் தேர்வாகி உள்ளது. எனக்கு தேசிய விருதுகள் கிடைக்கவில்லை என்பதை பெரிதாக எடுப்பதில்லை. கடமையை செய்கிறோம். பலனை எதிர்பார்க்கவில்லை. நமது கிராமிய கலைஞர்களை பெருமைப்படுத்த வேண்டும். திருமண விழாக்களில் தற்போது செண்டை மேளம் பயன்படுத்துகிறார்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் நம் கலையான பறை ஆட்டம் கரகாட்டம் ஒயிலாட்டம் போன்ற கலைகளை பயன்படுத்த வேண்டும்.
அப்படி பயன்படுத்தினால் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும். நாட்டுப்புற கலைஞர்களை பெருமைப்படுத்துவது நமது கடமை. இவ்வாறு தேவா கூறினார். இயக்குனர் விஜய் சுகுமார் கூறுகையில், ‘‘நம் உள்ளூர் கலையான பறை இசையை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த படத்தை எடுத்து உள்ளோம். படத்தை சுபா மற்றும் சுரேஷ் ராம் தயாரித்துள்ளனர்’’ என்றார்.
