Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஒரு ஜாதியினரை காயப்படுத்தி படமெடுப்பது துரோகம்: சென்ட்ரல் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு!

ஸ்ரீ ரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் சார்பில், வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் பாரதி சிவலிங்கம் இயக்கத்தில், விளிம்பு மனிதர்களுடைய வாழ்வின் வலியைச் சொல்லும் ஒரு ஆழமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ சென்ட்ரல் ” ஜூலை 18 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் பங்கேற்க, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது

இந்நிகழ்வினில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது…

சென்ட்ரல் பட டிரெய்லரும் பாடல்களும் பார்க்க எமோஷனலாக இருந்தது. இந்த யூனிட்டில் எனக்கு யாரையும் தெரியாது. பேரரசு இந்தப்படத்தில் லீட் ரோல் செய்துள்ளதாக சொன்னார். அவரை வாழ்த்த வேண்டும் என்று தான் வந்தேன். சென்ட்ரல் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். பேரரசுவை எனக்குப் பிடிக்கும் அவர் மனிதநேயமிக்க மனிதர். கொரோனா காலத்தில் அவர் செய்த உதவிகள் மிகப்பெரிது. அவர் படங்களிலேயே சின்ன சின்ன பாத்திரங்களில் நடித்திருப்பார். இந்தப்படத்தில் மெயின் ரோல் செய்துள்ளார். பேரரசு சினிமாவில் ஆட்சி செய்யுங்கள். காக்கா முட்ட்டை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் விக்னேஷ், இதில் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்கள். இப்படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள் நன்றி.

டிரம்ஸ் சிவமணி பேசியதாவது…

“ சென்ட்ரல் ” படத்தில் நடித்துள்ள, பணியாற்றியுள்ள கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சென்ட்ரல் ஸ்டேஷன் என் வாழக்கையின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. அங்கு இருந்து தான் பல கச்சேரிகளுக்குப் போய் வந்துள்ளேன் அந்த தலைப்பை இங்கு பார்த்ததும் ரொம்ப டச்சிங்காக இருந்தது. படத்தில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருந்தது. இந்தப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

கதை நாயகன் விக்னேஷ் பேசியதாவது…

இயக்குநர் பாரதி முதலில் என்னிடம் வந்து கதை சொல்லிவிட்டு, 4 வருடம் காணாமல் போய்விட்டார். அப்புறம் திடீரென ஒரு நாள் மீண்டும் பேசினார், அவர் ஞாபகப்படுத்தியவுடன் முழுக்கதையும் ஞாபகம் வந்தது. அந்தளவு கதை எனக்குப் பிடித்திருந்தது. படத்தில் நிறைய கஷ்டம் தந்தனர், ஆனால் அதைப்பற்றியெல்லாம் பேச மாட்டேன் எல்லாமே படத்திற்காகத்தான். பேரரசு சாருடன் நடித்தது மகிழ்ச்சி. இந்தப்படத்திற்கு நான் ஹீரோ என்கிறார்கள் ஆனால் என்னிடமே சொல்லவில்லை, படம் மிக நன்றாக வந்துள்ளது படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…

1980 பிப்ரவரியில் நான் சென்ட்ரலில் வந்து இறங்கினேன், டிக்கெட் எடுத்து நியாயமாகத் தான் வந்தேன். சென்னை என்றாலே சென்ட்ரல் ஸ்டேஷன் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சென்னையில் இருப்பவர்கள் பார்த்தாலே இந்தப்படம் ஹிட்டு தான். இந்த தலைப்பே மிக ஈர்ப்பாக அமைந்துவிட்டது. ஒரு சயின்ஸ் டீச்சர், 2 தமிழ் டீச்சர் சேர்ந்து, இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள். இந்த விழாவிற்கு வந்ததற்கு காரணம் என் அன்பு தம்பி, இயக்குநர் சங்க செயலாளர் பேரரசு தான். இரண்டு வாரம் முன் ஒரு கிளிப் அனுப்புயிருந்தார், அதைப்பார்த்தவுடன் பிடித்திருந்தது. உண்மையிலேயே நடிப்பில் அசத்திவிட்டார். பேரரசு உண்மையிலேயே வில்லன் தான், மிரட்டியே எல்லோரையும் வர வைத்துவிட்டார். அவருக்கு பயந்து தான் கே எஸ் ரவிக்குமார் வந்துள்ளார். சரியான ஆளைத்தான் வில்லனாக போட்டுள்ளீர்கள். நான் சென்னை வருவதற்கு முன்னர் என் வாழ்வில் நடந்ததெல்லாம் இப்படத்தில் வந்துள்ளது. மிக அருமையாக எடுத்துள்ளார்கள். அப்போதெல்லாம் 300 ரூபாய் சம்பாதித்தால், பொண்ணே தருவார்கள் ஆனால் சினிமாகாரனுக்கு பொண்ணு தர மாட்டார்கள். சினிமாக்காரன் என்றாலே மதிக்க மாட்டார்கள். சினிமாக்காரன் அரசியலுக்கு வரக்கூடாதென சொல்கிறார்கள், அப்படி யாரும் சொல்ல முடியாது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், வந்த பிறகு என்ன செய்கிறார்கள் என்பது தான் முக்கியம். சினிமாக்காரனை அரசியலுக்கு வரக்கூடாதென சொல்ல யாருக்கும் உரிமையில்லை. படத்தில் நாயகன் விக்னேஷ் மிக இயல்பாக நன்றாக நடித்துள்ளார். அனைத்து கலைஞர்களும் மிக சிறப்பாகச் செய்துள்ளனர். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் பாரதி சிவலிங்கம் பேசியதாவது…

எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. நான் அட்டகத்தி தினேஷை வைத்து ஒரு கதையை ஓகே செய்து, பல தயாரிப்பாளர்கள் பார்த்துக்கொண்டிருந்தேன் ஆனால் அது அமையவில்லை. அதன் பிறகு தான் இந்தக்கதை செய்தேன். மூன்று தயாரிப்பாளர்களும் உடனடியாக சம்மதித்து ஆபீஸ் தந்து ஆரம்பித்தார்கள். பின்னர் காக்கா முட்டை விக்னேஷ் வந்தார். இப்படத்தில் தயாரிப்பாளர்கள் மூவர் குமரகுரு சார், சிவலிங்கம் சார், தேவராஜ் சார் மூவரும், மிகவும் கஷ்டப்பட்டு இப்படத்தை உருவாக்கினார்கள். எங்கள் படத்தில் வந்து இணைந்த ஆளுமை பேரரசு சார், எங்களுக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்து வேலை பார்த்துள்ளார். நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றிகள். இங்கு வாழ்த்த வந்தவர்கள் அனைவரும் பேரரசு சாருக்காக வந்துள்ளனர் அனைவருக்கும் என் நன்றிகள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் இயக்குநர் பேரரசு பேசியதாவது…

தயாரிப்பாளர் அறிமுகப்படம் இது அவர்களுக்கான மேடை, இந்தப்படத்திற்காக அவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார்கள். மூணு தயாரிபாளர்களும் வாத்தியார்கள். அவர்கள் உழைப்பில் இப்படத்தை கொண்டுவந்துள்ளனர். இயக்குநர் பாரதி கதை சொல்ல வந்த போதே நெகட்டிவ் பாத்திரம் என்றார், நான் முதலில் யோசித்தேன், ஆனால் கதை கேட்ட பிறகு மிகவும் பிடித்திருந்தது. விளிம்பு நிலை மக்களின் கதை நான் பார்த்த கதை, உடனே நடிக்கலாம் என முடிவெடுத்து விட்டேன். முதலில் ஜாதிப்படமோ எனத் தோன்றியது. இது விளிம்பு நிலை மக்கள் கதை தான், ஒரு ஜாதியினர் வலி சொல்லும் கதை தான், ஆனால் இன்னொரு ஜாதியினரை காயப்படுத்தும் கதை இல்லை. ஒரு ஜாதியினரை காயப்படுத்தி படமெடுப்பது சினிமாவுக்கு செய்யும் துரோகம் அது போல் இல்லாமல் பாரதி இப்படத்தை சிறப்பாக செய்துள்ளார். விக்னேஷ் மிகச்சிறப்பாக செய்துள்ளார். தர்ஷன், குணா இருவரும் சிறப்பாக செய்துள்ளனர். பெரிய படங்களுக்கு ரசிகர்கள் தான் சப்போர்ட், சின்னப்படங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் தான் சப்போர்ட். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

முதலாளித்துவத்திற்கு எதிரான படைப்பாக, உழைப்பாளர்களுக்கு சாதி, மதம் ,மொழி, இனம் எதுவும் கிடையாது, அனைவரும் ஒன்றுதான் என்ற கருத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமான காக்கா முட்டை விக்னேஷ் இந்த படத்தின் கதையின் நாயாகனாக நடித்துள்ளார். கதையின் நாயகியாக சோனேஸ்வரி நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பேரரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மற்றும் சித்தா தர்ஷன், ஆறு பாலா, மேதகு ராஜா, அன்பு ராணி, கவிநிலவன், ஓம் கணேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். காடப்புறா கலைக்குழு படத்திற்கு ஒளிப்பதிவு செய்த வினோத் காந்தி இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.