சென்னை: மோகன் ஜி. இயக்கத்தில் ‘திரௌபதி 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. தனது திரைப்படங்களில் சாதியை ஆதரித்து காட்சிகளை வைத்து வருபவர் மோகன். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதில் ‘எம் கோணே’ என்ற பாடலை பாடகி சின்மயி பாடியிருக்கிறார். இந்நிலையில் பல சமூகப் பிரச்னைகள் குறித்து பேசும் பாடகி சின்மயி, சாதிய படங்களை இயக்கும் மோகனின் படத்தில் பாடுவதா எனப் பலர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் அந்தப் பாடலை பாடியதற்கு மன்னிப்பு கோருவதாக பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜிப்ரானை 18 ஆண்டுகளாக தனக்குத் தெரியும் என்றும் அவரது அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததால் வழக்கம் போல சென்று பாடியதாக சின்மயி குறிப்பிட்டுள்ளார். பாடலைப் பாடியபோது ஜிப்ரான் அங்கு இல்லை எனப் பதிவிட்டுள்ள சின்மயி, எப்படி பாட வேண்டும் என்று சொன்னார்களோ அப்படி பாடிவிட்டு கிளம்பிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இப்போதுதான் அந்தப் படம் குறித்து தனக்குத் தெரியவந்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். தனது சித்தாந்தங்களுக்கு எதிரானது என்பதால் அந்தப் படத்திற்கான பாடல் என முன்னரே தெரிந்திருந்தால் பாடியே இருக்க மாட்டேன் எனவும் இதுதான் உண்மை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
